பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 * நிலைபெற்ற நினைவுகள் பாடல்களை பாவத்தோடு பாடினார். பள்ளிக் கூடப் படிப்பு, கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்கள் பற்றி எல்லாம் டி.கே.சி.க்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. பள்ளிக்கூடம் போய் படிப்பது வீண் என்ற கருத்து உடையவர் அவர். படித்துப் பட்டம் பெற்று பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த பலரது எழுத்துக்கள், எண்ணங்கள் எல்லாம் அவருக்குப் பிடிக்கா. அவை பற்றிக் கேலியாகவும் கண்டித்தும் அவர் பல இடங்களில் எழுதியிருக்கிறார். எங்களிடம் பேசும் போதும் அதே தொனியில் அவர் தமது கருத்துக்களை அழுத்தமாகக் கூறினார். டி.கே.சி. ரொம்பப் பெரியவர். அறிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் பலராலும் மதித்துப் போற்றப்பட்டவர். அவரைக் காணச் சென்ற நாங்கள் சிறுவர்கள். இருவர் மாணவர்கள். எனக்கு அப்போது வயது 21. எனினும் தோற்றத்தில் ஒரு பையன் மாதிரித்தான் இருந்தேன். இரண்டு மூன்று வருடங்களாகத் தான் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இருப்பினும் டி.கே.சி. எங்களை சமமானவர்கள் போல் மதித்து இயல்பாகப் பேசினார். தமது கருத்துக்களை தாராளமாக எடுத்துச் சொல்லி மகிழ்ந்தார். அது அவருடைய பெரிய மனிதப் பண்பையும் உயர் பண்பாட்டையும் புலப்படுத்தியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகவே உரையாடல் நிகழ்ந்தது. பிறகு நாங்களாகவே விடைபெற்றுப் புறப்பட்டோம். எங்களுக்கு மிகுந்த மனநிறைவு தந்தது அந்தச் சந்திப்பு. நான் மறக்க முடியாத மிக இனிய அனுபவமாக அது அமைந்தது. ஆயினும், டிகேசியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் என்னுள் எழுந்ததில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிட்டியதில்லை. டி.கே.சி.வீட்டிலிருந்து திரும்பியபோது, ரோடு சுற்றி, கொக்கிரகுளம் பாலம் வந்து, பாலம் வழியாக ஜங்ஷன் சேர்ந்து, நேரே நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் நடந்து திருநெல்வேலி திரும்பினோம். எனக்கு படிப்பதற்குப் புத்தகங்கள் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. புதிது புதிதாக நல்ல புத்தகங்கள் வெளிவந்தன. அவற்றில் அநேகம் நூல்களை நாங்கள் விலை கொடுத்து வாங்கினோம். -