பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.11.1920ல் பிறந்த வல்லிக்கண்ணன் 09.11.2006-ல் மறைந்தார். வல்லிக்கண்ணன் கடைசியாக எழுதிய நூல் இது. ஒருமுறை ஜெயகாந்தன் வல்லிக்கண்ணனைப் பார்த்து, “நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள். அது உங்கள் வரலாறாக, மட்டும் அல்லாமல், தமிழகத்தின் பண்பாட்டுக் கலாச்சார மற்றும் இலக்கியப் பதிவாகவும் அமையும்” என்று கூறினார். ஜே.கே.வின் வேண்டுகோளை ஏற்றுவகதன் வரலாற்றை எழுதத் தொடங்கினார். “நிலைபெற்ற நினைவுகள்” என்று வ.க.வின் தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. நூலின் இரண்டாம் பாகம். வெளிவருவதில் இலக்கிய விமர்சகர் தி.க.சி. அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம். வ.க. அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதியும் தொலைபேசியில் பேசியும், இந்நூலை எழுதத் துண்டினார்கள். 1946 வரையில் அதாவது இந்தியச் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுடன் வ.க.வின் வரலாறு இந்நூலில் பதிவாகியுள்ளது. மரணம் பற்றிய செய்தியுடன் ஆரம்பமாகும் இந்நூலை மரணம் பற்றிய செய்தியுடன் முடித்துவிட்டு மரணமடைந்து விட்டார் வ.க. “எழுத்து என்பது எனக்கு உயிர் மூச்சாகவும், உற்சாகம் ஊட்டும் உந்து சக்தியாகவும் அமைந்திருந்தது. பணம் பண்ணுவது பற்றியோ, வாழ்க்கை வசதிகள் தேடிக் கொள்வது பற்றியோ எண்ணாமல் எப்போதும் வகைவகையாக எழுதுவதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்டேன். புத்தகங்கள் படிப்பதே என் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது," என்று இந்நூலில் குறிப்பிடுகிறார் வல்லிக்கண்ணன்.