பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 & நிலைபெற்ற நினைவுகள் குளிக்குமிடம் வசதியாக இருந்தது. பலர் குளித்துக் கொண்டிந்தார்கள். சண்முகசுந்தரம் வேட்டி சட்டைகளுக்குச் சோப்பு போட்டுத் துவைத்து அவற்றை அங்கேயே உலரவைத்தார். சவுகரியமாகக் குளித்தோம். உலர்ந்த உடுப்புகளை அணிந்துகொண்டு இந்திரா அலுவலகம் வந்தோம். அதற்குள் கோ.த.ச. வந்திருந்தார். நேமத்தான்பட்டி என்ற பக்கத்து ஊரில் வசித்த பழனியப்பச் செட்டியாரும், உதவியாளராகப் பணிபுரிந்த வீரவல்லுனர் கந்தரமும் வந்து சேர்ந்தார்கள். ‘என்ன, வீட்டிலே சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டீர்களா? உங்க அண்ணன் கடிதம் எழுதியிருக்கிறார் என்றார் கோதச நான் வீட்டை விட்டுக் கிளம்பியபின், வெகுநேரம் வரை விடுதிரும்பாததால் அம்மாவும் சகோதரர்களும் கவலைப் படலானார்கள். நான் எழுதி வைத்த கடிதத்தை அவர்கள் ரொம்பத் தாமதமாகத் தான் பார்த்திருக்கிறார்கள். அண்ணா கோமதிநாயகம் என்னைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டார். சில பத்திரிகை அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதினார். காரைக்குடி கோ.த. சண்முக சுந்தரத்துக்கும், சென்னை சக்திதாசனுக்கும் எழுதி விசாரித்திருந்தார். தம்பி அங்கே வந்தால் உதவிபுரியுங்கள். அவன் சென்னைக்குப் போவதானால் போகட்டும். ஆனால் நடந்து போக வேண்டாம். எனக்கு எழுதினால் தேவையான பணம் அனுப்பிவைப்பேன். அவன் திருநெல்வேலி திரும்பி வருவதானாலும் வரட்டும்’ என்று அண்ணா கோ.த.ச.க்கு எழுதியிருந்தார். கோ.த.ச. அந்தக் கடிதத்தை என்னிடம் காட்டினார். நீங்கள் இங்கே வந்திருப்பதாக அண்ணனுக்குக் கடிதம் எழுதி விடுகிறேன் நீங்கள் எழுதுங்கள் என்றார். ஆர். சண்முகசுந்தரம் என்னை சக்தி காரியாலயத்துக்கு அழைத்துப் போனார். யுத்தகாலத்தைக் கருதி தற்காலிகமாக சக்தி' பத்திரிகையும் பதிப்பகமும் காரைக்குடிக்கு இடம் பெயர்ந்திருந்தன. அலுவலகம் இருந்த இடம் சிறியது தான். வை.கோவிந்தன் இருந்தார். துணை ஆசிரியர் தி.ஜ. ரங்கநாதனும் (தி.ஜர) இருந்தார். இருவரிடமும் என்னை அறிமுகம் செய்து, எனது தேவையைத் தெரியப்படுத்தினார் சண்முகசுந்தரம். தி.ஜ.ர. எனது எழுத்தைப் பாராட்டினார். சக்தி மாத இதழிலும் என் கதைகள் பிரசுரம் பெற்றிருந்தன. -