பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 & நிலைபெற்ற நினைவுகள் வழக்கமான காரியங்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தன. நானும் என் இயல்புப்படி படிப்பது எழுதுவது, கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்புவது என்று மாதங்களை கழித்துக் கொண்டிருந்தேன். டிசம்பர் மாதம் ஒரு நாளில் நான் எதிர்பாராத விதத்தில் கடிதம் ஒன்று வந்தது. திருச்சியில் இருந்து விரா. ராஜகோபாலன் எழுதியிருந்தார். நேரில் அவர் வாக்களித்தபடி அவர் எனக்கு உதவ முன்வந்திருந்தார். ‘புதுக்கோட்டையில் இருந்து வெளிவரும் 'திருமகள்' உங்களுக்குத் தெரிந்த பத்திரிகைதான். அதன் வெளியீட்டாளரான ராசி, சிரம்பரம் என்னைக் கண்டு பேசி யோசனைகள் பெற வந்திருந்தார். திருமகளை மணிக்கொடி வழியில் தரமான மறுமலர்ச்சி இலக்கிய இதழாக வளர்க்க அவர் விரும்புகிறார். அதற்கு தனக்குத் துணைபுரியக் கூடிய ஒருவரை சிபாரிசு செய்யும்படி என்னைக் கேட்டார். நான் உங்கள் பெயரைக் கூறினேன். அவருக்கும் திருப்திதான். அவர் உங்களுக்குக் கடிதம் எழுதுவார். நீங்கள் தயங்காமல் புதுக்கோட்டை போய் திருமகள் பணியை ஏற்றுக் கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாம் ராசி. சிதம்பரம் செய்து தருவார். அவர் கடிதம் கிடைத்த உடனேயே புறப்பட்டு விடுங்கள்’ என்று வி.ரா.ரா. எழுதியிருந்தார். இரண்டு நாள்களில் ராசி. சிரம்பரம் கடிதமும் வந்தது. ஆகவே நான் 1943 ஜனவரியில் புதுக்கோட்டை போய்ச் சேர்ந்தேன். பிறந்த புதுவருடம் என் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் வந்து சேர்வதற்கு உதவுகிற காலஆரம்பமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டது. - நான் முதல்முறையாக அந்தப் பாதையில் ரயிலில் சென்றது 1942 மே மாதத்தில், அதன் பிறகு தான் ஆகஸ்டுப் போராட்டம் தலை தூக்கி, நெடுகிலும் சேதங்களை ஏற்படுத்தியது. அதன் எச்சங்களை இப்போது பல இடங்களில் காண முடிந்தது. தமிழ்நாட்டில் சில இடங்களில் வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் செயல்பாடுகள் வெகு மும்முரமாக இருந்தன. அவற்றில் தேவகோட்டைப் பகுதியும் ஒன்று ஆகும். ரயில் நிலையங்கள், தபால் நிலையங்களுக்குத் தீ வைப்பது, தந்திக் கம்பியை அறுத்து, தந்திக்கம்பங்களை முறித்து வீழ்த்துவது போன்ற அழிவு வேலைகள் அந்த வட்டாரத்தில் அதிகம்