பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 77 அச்சாபீசுக்குப் போவது, புரூஃப் பார்த்துத் திருத்திக் கொடுப்பது, தபால்களைக் கவனிப்பது, இதழ் தயாரானதும் பிரதிகளைப் பல இடங்களுக்கும் அனுப்புவதற்குத் தேவையான சகல பணிகளையும் செய்வது - இப்படி ஏகப்பட்ட வேலைகள் செய்தாக வேண்டும். "சினிமா உலகம் பத்திரிகை சம்பந்தப்பட்ட கணக்குகளை எழுதுவதற்கு ஓர் அன்பர் (தொழில் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவர்) உதவிக் கொண்டிருந்தார். அதற்காக அவர் ஏதோ சன்மானம் பெற்று வந்தார். ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதி டைப் செய்து உரிய இடங்களுக்கு அவற்றை அனுப்புகிற பணியை வேறு ஒருவர் பகுதி நேர வேலையாக ஏற்றுச் செய்து கொண்டிருந்தார். நான் வந்த பிறகு, அவ்வேலைகளையும் நானே செய்ய முடியும் என்பதால் செட்டியார் அவ்விரு அன்பர்களையும் வேண்டாம் என்று நிறுத்திவிட்டு, அப்பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்தார். எனக்குச் சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை சாப்பாடு ஒட்டலில், தங்குமிடம் வீட்டில் அவசியச் செலவுக்குத் தேவைப்படுகிற பணத்தை அவ்வப்போது கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலைமை. அது திருப்திகரமாக இருந்தது எனககு. ஸ்டுடியோக்களுக்குப் போவது, பட உலகம் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பது, விழா, விசேஷம் என வரும் நிகழ்ச்சிகளுக்குச் செல்வது முதலியவற்றைச் செட்டியாரே கவனித்துக் கொண்டார். இவ்வட்டாரங்களில் நான் அறிமுகமாக வேண்டும், பலரையும் பழக்கம் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததில்லை. படப்பிடிப்பைப் பார்க்க வேண்டும், படத்தில் நடிக்கிற நடிகையர் நடிகர்களைக் காண வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்ததில்லை. அப்படி விருப்பம் கொண்டு தெரிவித்திருந்தாலும், அவை நிறைவேறுவதற்கு ஆசிரியர் உதவியிருக்கமாட்டார் என்றே எனக்குத் தோன்றியது. பத்திரிகை தொடர்பான சிறுசிறு வேலைகளையும், வெளி உலக அலுவல்கள் தொடர்புகளையும், செட்டியாரின் உறவினரான எஸ்.பி. கிருஷ்ணன் என்ற இளைஞர் கவனித்துக் கொண்டார். அவரும் அக்குடும்பத்தில் ஒருவராக வசித்து வந்தார். அவர் "சினிமா உலகம்’ பத்திரிகை மானேஜர் என்று சொல்லிக்கொண்டு சுயமுனைப்பில் பல வேலைகள் செய்து மகிழ்ந்தார்.