பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 79 காலமும் வசதியும் இருந்தன. எப்போதும்போல் நவசக்தி, கலாமோகினி இதழ்களுக்கு நான் எழுதிக் கொண்டிருந்தேன். அச்சந்தர்ப்பத்தில் தான், திருச்சிக்கு அப்பால் 28 மைல்கள் தள்ளியிருந்த சிற்றுாரான துறையூரில் இருந்து, மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை இதழாக “கிராம ஊழியன்’ என்ற பத்திரிகை வரத் தொடங்கியது. 1943 ஆகஸ்ட் மாதம் முதல் அதுக்கும் கதைகள் எழுதி அனுப்பலானேன். அக்காலகட்டத்தில் பத்திரிகைப் பிரசுரத்துறையில் ஒடு புது உதயம் ஏற்பட்டது. யுத்தகால நெருக்கடி காரணமாகக் காகிதக் கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அதனால் புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது. - பத்திரிகை ஆரம்பித்து நடத்துவதற்கு அரசு அனுமதி அவசியம் தேவை. அரசு அனுமதி வழங்க உறுதியாக மறுத்துக் கொண்டிருந்ததால், சட்டத்தில் ஒட்டை கண்டு புதிய முறையில் பத்திரிகை போன்ற வெளியீடு கொண்டு வரும் யுக்தியை 'உலகம் சுற்றும் தமிழன்’ எனப் பெயர் பெற்ற ஏ.கே. செட்டியார் கண்டார். 'குமரி மலர்' என்ற பெயரில் மாதம் ஒரு புத்தகத்தை, அவர் வெளியிடலானார். ஏ.கே. செட்டியார் உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றி அனுபவம் பெற்றவர். தனது பயணங்கள் குறித்து சுவாரசியமான கட்டுரைகளை பல பத்திரிகைகளிலும் எழுதி வந்தார். அவை 'உலகம் சுற்றும் தமிழன்’ என்ற புத்தகமாக சக்தி வெளியீடாகப் பிரசுரம் பெற்றன. அவரே ஒரு பத்திரிகை நடத்தத் திட்டமிட்ட போது தான் தடை குறுக்கிட்டது. ஆகவே அவர், பத்திரிகை அல்லாத ஆயினும் பத்திரிகையின் அம்சங்கள் பலவும் கொண்ட - ‘மாதம் ஒரு புத்தகம் ஆன குமரி மலர்' வெளியீட்டைப் பிரசுரித்துப் புதுவழி காட்டினார். அது தரமான சிறப்பிதழாக விளங்கியது. பின்னர், ஏ.கே. செட்டியார் காட்டிய வழியில் தொடர்ந்து அநேகர் மாதம் ஒரு புத்தகம் வெளியிடுவதில் முனைந்தார்கள். கதை மலர், தமிழ் மலர், புதுமலர், கதைக் கொடி என்றெல்லாம் பலப்பல பெயர்களில் வெளியீடுகள் கொண்டு வரலானார்கள். சில தரமான தொகுப்புகளாக அமைந்திருந்தன. பல சாதாரண வெளியீடுகளாகவே இருந்தன.