பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 95 வழங்குவதில்லை என்ற நிலைமை. ஆகவே இருவரும் யோசனை செய்தபடியே இருந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவில் ஆங்கிலேய அரசு பத்திரிகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி பத்திரிகைகள் இன்னின்ன விஷயங்களை வெளியிடக்கூடாது. பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை அரசு தணிக்கை செய்த பிறகே அச்சிட வேண்டும். அரசு அதிகாரிகள் பத்திரிகைகளைக் கண்காணிப்பார்கள் என்றெல்லாம் விதிகளை வகுத்தது பிரிட்டிஷ் ஆட்சி. பத்திரிகைச் சுதந்திரத்தில் தலையிட்டு, அதன் உரிமைகளைப் பறிக்கின்ற இத்திட்டத்தை எதிர்த்து இந்தியப் பத்திரிகைகள் பல தங்கள் வெளியீட்டை நிறுத்திக் கண்டனம் தெரிவித்தன. தமிழ்நாட்டில் தினமணியும் மற்றும் சில பத்திரிகைகளும் பிரசுரிப்பதை நிறுத்தி, அரசின் போக்கிற்கு எதிர்ப்புக் காட்டின. இதையே காரணமாகக் கூறி கிராம ஊழியன் இதழும் வெளி வருவதை நிறுத்திக் கொண்டது. புதிய பத்திரிகை தொடங்குவதற்கு அனுமதி பெற முடியாத நிலையில், கிராம ஊழியன் இதழையே, கலாமோகினி போல இலக்கிய மாதம் இருமுறை இதழாக மாற்றி, புத்தக வடிவத்தி வெளியிடலாமே என்று திருலோக சீதாராமு அ.வெ.ர.கி.ரெட்டியாரும் எண்ணினார்கள். திருச்சி இலக்கிய நண்பர்களும் அதை ஆதரித்தார்கள். மறுமலர்ச்சி இலக்கிய எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் கும்பகோணத்தில் சும்மாதான் இருக்கிறார். அவர் ஆண்பெண் உறவு பற்றி, உளவியல் ரீதியில் சிறுகதைகள் எழுதுவதில் தீவிரம் காட்டினார். அதுவரை அவரது கதைகளை வரவேற்று வெளியிட்டு வந்த 'கலைமகள் முதலிய சென்னைப் பத்திரிகைகள், சோதனை ரீதியான அவருடைய கதைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தன. கு.ப.ரா.வின் எழுத்துக்கள் எந்த இதழிலும் வெளிவர முடியாத நிலைமை எற்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை ‘கிராம ஊழியன்’ மறு மலர்ச்சி இலக்கிய இதழின் கெளரவ ஆசிரியர் ஆக்கி, அவருடைய எழுத்துக்களை இதழ்தோறும் வெளியிட்டு வந்தால், பத்திரிகைக்குத் தனி மதிப்பும் இலக்கிய வாசகர்களிடையே நல்ல வரவேற்பும் கிட்டும் என்று திருச்சி இலக்கிய நண்பர்கள் யோசனை கூறினார்கள்.