பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 97 சக்திதாசனும், ராதாமணியும், அந்த அம்மாளின் சகோதரிகள் இரண்டு பேரும் சாலைத் தெருவில் உள்ள வசதியான வீட்டில் வசிக்கிறார்கள். சகோதரிகள் இசைப்பயிற்சி, நாட்டியம் என்று ஈடுபட்டிருக்கிறார்கள். கே.ராமநாதனும் அவர்களோடு தான் வசிக்கிறார் என்றும் திருலோகம் தெரிவித்தார். கேராமநாதன் தான் இப்போது நவசக்தி'யைக் கவனித்து கொள்கிறார். அவர் இலக்கிய நோக்கே வேறு. அதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்றும் அவர் சொன்னார். ‘நவசக்தி' திரு.வி.கல்யாணசுந்தரனாரின் (திரு.வி.க) பத்திரிகையாக நெடுங்காலம் வளர்ந்தது. ஒரு காலத்தில் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, வெ.சாமிநாத சர்மா முதலியவர்கள் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பின்னர், அதன் இறுதிக் கட்டத்தில் கே. ராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் முதலியோர் உதவி ஆசிரியர்களாக உழைத்தார்கள். ஒரு கட்டத்தில் கேராமநாதன் இலங்கை போய் விட்டார். கம்யூனிஸ தத்துவத்தில் ஈடுபாடு கொண்ருந்த அவர் அங்கே தேசாபிமானி’ என்ற பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினார். அங்குள்ள அரசு அவரைக் கண்காணித்து வந்தது. கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதும், அவர் அங்கிருந்து தப்பி தமிழ்நாடு வந்து சேர்ந்தார். 'நவசக்தி வேலையில் ஈடுபட்டார். திரு.வி.க. முதுமை காரணமாக பத்திரிகைப் பணியைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, அவரிடமிருந்து நவசக்தியை ஏற்று நடத்த விரும்பினார் என்றும், ஆனால் இறுதிக் கட்டத்தில் நவசக்திக்காகச் சிரமங்களோடு பணிபுரிந்து வந்த சக்திதாசனுக்கே இதழ்ப்பொறுப்பை திரு.வி.க. தந்துவிட்டார் எனவும் செய்தி நிலவியது. சக்திதாசன் சுப்பிரமணியன் ராதாமணி அம்மையார் துணையோடு, நவசக்தி யைத் தனி இலக்கிய இதழாக, புத்தகவடிவத்தில் வெளியிடலானார். கே.ராமநாதன் அவருடன் சேர்ந்து இதழ்ப் பணிகளை கவனித்து உதவினார். டிரெடில் மிஷினை இயக்க முதியவர் ஒருவர் இருந்தார். அச்சுக்கோப்பதற்குத் தனியாக ஒரு நபர் உண்டு. 1944 ஜனவரி இதழ் வெளிவர வேண்டும். பணத்துக்காக சக்திதாசனிடமிருந்து தபாலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதழுக்குரிய விஷயங்கள் சிறிது சிறிதாக அச்சுக் கோக்கப்பட்டு, இரண்டு இரண்டு பக்கங்களாக அச்சாகிவந்தன.