பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 : நிலைபெற்ற நினைவுகள் வ.ரா. (வராமஸ்வாமி) நவசக்தியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் சமூக நிலைமைகள், கல்வி வளர்ச்சி பற்றிய பொதுப்படையான சிந்தனைகளைச் சிறுசிறு கட்டுரைகளாக்கித் தந்தார் அவர் மாதம் தோறும் அவரே அலுவலகத்துக்கு வந்து கட்டுரையைக் கொடுத்துச் செல்வது வழக்கம் என்று தெரிந்தது. அதன்படி ஜனவரியில் ஒருநாள் வந்தார். மனிதன் இழுத்துச் செல்லும் ரிக்ஷாதான் அந்நாள்களில் நடைமுறையில் இருந்தது. வரா. ரிக்ஷாவில் தான் வந்தார். வ.ரா.எங்கே போகவேண்டுமானாலும் மனிதன் இழுத்துச் செல்கிற ரிக்ஷாவில் தான் போவார். மனிதாபிமானம் பற்றிப் பெரிதாகப் பேசுகிற, எழுதுகிற வராமனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் ரிக்ஷாவில் போகலாமா? அதைப் பற்றிக் கேட்டால், பாவம் கஷ்டப்படுகிற ஒருவனை ஆதரிப்பதே என் நோக்கம் வண்டி இழுத்துப் பிழைக்கிற அவனுக்கும் காசு வேண்டுமல்லவா என்கிறார். இருக்கட்டும். ஆனால் மாலை நேரங்களில் கடற்கரைக்கு ரிக்ஷாவில் போகிற அவர் எப்படி காற்று வாங்குகிறார் தெரியுமா? ரிக்ஷாவை விட்டு கீழே இறங்க மாட்டார். ரிக்ஷாக்காரன் வண்டியைத் துக்கிப்பிடித்த படியே நிற்க வேண்டும். அவர் ஜம்மென்று ரிக்ஷாவில் உட்கார்ந்தபடியே காற்று வாங்குவார். இப்படி ரொம்ப நேரம் ரிக்ஷாக்காரனிடம் வேலை வாங்குவார். இது தான் மனிதாபிமானமோ? - இப்படி ராமநாதன் ஒருநாள் என்னிடம் குறிப்பிட்டது உண்டு. நவசக்தி ஜனவரி இதழுக்குரிய கட்டுரையைத் தருவதற்காக வ.ரா. அலுவலகம் வந்தபோது நானும் ராமநாதனும் அங்கே இருந்தோம். திருலோக சீதாராமனும் இருந்தார். ராமநாதன் என்னை அறிமுகப்படுத்தினார். வ.ரா.என்னைக் கூர்ந்து நோக்கினார். முன்பே சக்திதாசன் சொல்லியிருக்கிறார். எழுத்தாளன் ஆவதற்காக வீட்டைவிட்டு வெளியேறி, நடந்தே புறப்பட்டுவிட்டீர் என்றும் சொன்னார். பேஷ், இப்படித் துணிச்சலாக வீட்டை விட்டு வெளியேறுகிறவர்கள் தான் தமிழுக்காக ஏதாவது செய்ய முடியும்’ என்று கூறினார். நீர் முறையாகத் தமிழ் இலக்கியம் படித்திருக்கிறீரா? என்று கேட்டார். 'இல்லை’ என்றேன்.