பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களின் கவலைக்கும் கலக்கத்திற்கும், காரணங்கள் குறைவு. ஆசைக்கும், அனைத்துலக இன்பத்திற்கும் ஆசைப்படாத மனதினால், பல நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுபட்டுப் போகின்றார்கள். அதனால், நெருக்கடிகள் விளைவிக்கின்ற இதயநோய், கேன்சர், வயிற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

அதன் காரணமாக, அவர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட போதிலும் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றார்கள். சொல்லாலும் செயலாலும் அவர்கள் சுகமாக வாழ்கின்றார்கள். இந்த உதாரணமானது. இளமையாக வாழ்வதற்கு, முதலில் வாழ்க்கை நெருக்கடிகளை சமாதானத்துடன் சமாளிக்கின்ற குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

சூழ்நிலை
மூன்றாவது காரணம் சூழ்நிலையாகும். ஒவ்வொருவரும் வாழ்கின்ற தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போலவே, உடல் அமைப்பு மாறுபடுகின்றது. அதிக சூரிய வெப்பம் உள்ள இடங்களில் வாழ்கின்றவர்களுடைய தோலானது அதிகமாகப் பாதிக்கப்படுகின்றது. தோலின் மேற்பகுதி வறட்சித் தன்மை உடையதாகவும், பிறகு சுருக்கங்கள் விழுந்து முதிர்ச்சியுற்றது போலவும் தோற்றமளிக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு வெயில் படாமல் உடைகள் மறைந்திருக்கின்ற உடல் பகுதியையும், ஆராய்ச்சி செய்த மருத்துவ வல்லுநர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். அதாவது அதிகம் வெயிலால் பாதிக்கப்படுகின்ற உடற் பகுதி, சற்று வயதானதாகவே தோற்றம் அளிக்கிறது.