பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


தோலின் மேற்புறம் கடினமாக மாறுவதுடன், காய்ந்துபோகும் வறட்சித் தன்மையையும் அடைகிறது.

உள்ளே இருக்கும் கொழுப்புப் பகுதி குறையவும் கரையவும் நேர்வதால், தோலில் சுருக்கம் நேர்கிறது. தொங்கலான தோற்றத்தை அடைகின்றது. அதே சமயத்தில், இணைப்புத் தசைகளும் முதிர்ந்து போகின்றன. இதன் காரணமாக, தோலின் வழவழப்பு மறைகிறது. சாதாரணமான இயங்கும் இயல்பு மறைகிறது. நீண்டு சுருங்கிட நேர்த்தன்மை கொள்ளும் ஆற்றலைத் தோல் இழப்பதால்தான், தோலில் சுருக்கம் விழுகின்றது.

இப்படி திசுக்களும் தசைகளும் தளர்ச்சியடைவதால்தான், முகத்திலே சுருக்கம், கழுத்துப் புறத்திலே மடிப்புக்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்ற தருணத்தில், இரத்தத் தந்துகிகள் (அதாவது சிறு சிறு குழாய்கள்) தங்களது அகலத்தில் குறைகின்றன. அதனால் இரத்தப் போக்குவரத்தும் குறைகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தோலானது அதன் இயற்கை வண்ணத்தையும் எழிலையும் இழக்க, அதன் மூலம், தோன்றும் இளமையை இழக்க, ஒரு வயதான தோற்றத்தை அளித்து விடுகிறது.

வயதாகும் தோற்றத்திற்கு முன்னோடியாகக் காட்டுவது வெளியில் தெரியும் தோல் என்பதால், அதனைப் பக்குவமாகப் பாதுகாக்கும் பழக்கத்தை நாம் மேற்கொண்டாக வேண்டும். (இம்முறைகளை பின்வரும் அத்தியாயங்களில் விளக்க இருக்கிறோம்.)

வயதும் முடியும்:

முடி உதிர்ந்து தலை வழுக்கையாவது அல்லது கறுத்த முடி நரைத்தும் போவது வயதானதிற்கு அறிகுறி என்பார்கள் ஆண்களுக்கு நரைப்பது போலவே, முடி உதிர்வதும் ஓர்