பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



விருந்து சாப்பிட்டு விட்டு வெறுந் தரையிலா படுப்பது? நல்ல பட்டுமெத்தை போட்ட கட்டில் இருந்தால் நிம்மதியாக உறங்கலாமே என்ற ஆசை வந்தது. நினைத்தான். ஆசைத் தவிப்பு அவனை விடவில்லை. என்ன ஆச்சரியம்! மெத்தை பரப்பிய பகட்டான கட்டில் அவன் முன்னே கிடந்தது. பாய்ந்து விழுந்து படுத்தான். மெய்சுகம் அவன் மேனி முழுதும் பரவியது.

‘இதுவல்லவோ சுகம். இப்படியே வாழ்க்கை இருந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்’ என்று அவன் அமைதியடைந்தானா? ஆனந்தப்பட்டானா? அதுதான் இல்லை. அவனது பேய் மனம் மேலும் தவிப்பை உண்டாக்கியது. கட்டிலும் மெத்தையும், தென்றலும் நிழலும் போதுமோ? நான்கு கன்னிப் பெண்கள் சுற்றிலும் அமர்ந்துகொண்டு கால்களைப் பிடித்துவிட்டால் அல்லவா கால்வலி போகும்? தூக்கமும் வரும் என்று நினைத்தான்!

ஆகா! அவன் நினைத்தது போலவே நான்கு அழகான பெண்கள் அவன் காலடியில், அழகான பெண்கள்தான், அமர்ந்து கால்களை மெதுவாக வருடிப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இதுவல்லவோ பூலோக சொர்க்கம்’ என் வாழ்நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிட வேண்டும். என்று நினைத்தானா? அதுதான் இல்லை, சுகம் கண்ட ஆசை, சுற்றி வளைத்து பலவற்றை நினைக்கத் தொடங்கியது. அவனைத் தூண்டியது. ஆசை நோயில் வீழ்ந்தால் என்ன நடக்கும்?

‘இப்பொழுது ஒரு புலி வந்தால் என்ன நடக்கும்’ என்று அவன் மனம் எண்ணிப் பார்த்தது. அடுத்த விநாடியே ஒரு புலி வந்தது. அவனை அடித்துக் கொன்று தின்றுவிட்டுப் போய் விட்டது. பாவம்! நல்லது