பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

29


ஆற்றலைக் கண்டு அந்த நாட்டு அரசனும், அவனுக்கு அரண்மனையில் உயர்ந்த பதவி அளித்துக் கெளரவித்தான்.

வாலிபனாகிக் கொண்டு வரவர தந்தையின் எண்ணமெல்லாம், கலவரத்திலேதான் உழன்று கொண்டிருந்தது. இப்பொழுது அரண்மணை உத்தியோகமும் கிடைத்தாகி விட்டது. திருட்டுக்கு நல்ல வாய்ப்பு உண்டே! நம் குடும்ப மானமும் பாரம்பரியமும் இதோடு தொலைந்தது என்று தந்தை தவித்தார். மகனுக்குப் பதவி கிடைத்தது பற்றி மகிழ்ச்சி ஒரு புறம். மானபங்கப்படப் போகிறோமே என்ற கலக்கம் ஒரு புறம்.

தன் மகன் எப்படியிருப்பான் என்று கணித்து வைத்தக் குறிப்பினை, யாருக்கும் தெரியாமல்தான் வைத்திருந்தார். ஆனால், மகனுக்குக் கிடைத்த செய்தி, அவருக்கே தெரியாமல்தான் இருந்தது.

தனது விதி திருட்டுப் பழக்கத்தில் திருப்பி விட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்ட மகன், முதலில் தடுமாறிப் போனான். விதியை மதியால் வெல்லலாம் என்று அவனது கல்வியறிவு கண் சிமிட்டியது. முடியுமா மாற்ற என்று விதி நினைவு அச்சமூட்டியது. இரண்டுக்கும் இடையில் மகனும் இருதலைக் கொள்ளி எறும்பானான்.

மாலையில் வேலை முடிந்து, வீடு திரும்பும் பொழுதெல்லாம் அவனது உள்ளங்கை அரிக்கும். எதையாவது ஒரு பொருளை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று ஆசை மனம் துடிக்கும். இதனை அடக்கி அடக்கிப் பார்த்தான்,