பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

33


என் விதியோடு போராடிக் கொண்டிருந்தேன். எதையாவது திருட வேண்டும் என்ற என் மன அரிப்பை இப்படி மாற்றிக் கொண்டேன். அரண்மனையிலிருந்து தெரியாமல் இந்த மண்ணையும் திருடிக் கொண்டு வந்தது தவறுதான். என்னை மன்னிக்க வேண்டாம். தண்டித்து விடுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.

விதியை மதியால் வெல்ல முயன்ற இளைஞனை, மன்னன் வாழ்த்தினான். அவன் அறிஞன்தான் என்று பாராட்டினான். பெற்ற மகனுக்குத் தான் கற்றுத் தந்த கலைகளும் கேள்வி அறிவும் கைவிட்டுப் போய் விடவில்லை. மானத்தைக் காப்பாற்றி விட்டது என்று ஈன்ற பொழுதினும் சான்றோன் எனக் கேட்டத் தாய்போல், தந்தை மனம் மகிழ்ந்தான்.

திருடும் குணத்தை மனத் தெம்புடன், வெற்றி கண்ட அந்த இளைஞனைப் போல, மனதை அடக்கி ஆளும் வல்லமை படைத்தவர்களே, வாழ்க்கையில் ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றார்கள். எதையாவது எண்ணச் செய்வது. ஏக்கமுற வைத்து, புரட்டி எடுத்து சித்ரவதை செய்கின்ற பொய் நோய்க்கு ஆளாகாதவனே, வாழ்க்கையில் நோயில்லாமல் வாழ முடியும்!

கற்ற அறிவின் மூலம் வெற்றி பெற்றவனைப் போல, வாழ்வில் வெற்றி பெறுபவர்களும் உண்டு. இருந்த தண்ணீரை வந்த வெள்ளம் கொண்டு போன கதை போல, இயல்பாகவே இருக்கின்ற தன் சுய அறிவையும், வந்தவன் சொல்லுக்கு விற்று, வாழ்விழந்தவர்களும் உண்டு. அவ்வாறு வாழ்விழந்த உலகநாதனை இங்கே பார்ப்போம்.