பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

37


கைக்குப் போகத் தொடங்கின. வஞ்சத்துடன் உறவாடிய சாமிநாதன் வீசிய வலையில் சிக்கிய உலகநாதன், பஞ்சம் என்னவென்பதை உணரத் தொடங்கினான். நெஞ்சம் நினைப்பதற்குள்ளே நெருங்கிப் பழகியவர்கள், இருட்டில் நிழல் போல மறைந்தே போனார்கள். நினைத்ததை முடிக்க வந்த சாமிநாதன், சாதித்த சாதனையைச் சொல்ல தன் தலைவனை நோக்கிப் போனான்.

வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தை அடித்துக் கொண்டு போனது போல, வைத்துக் காத்த சொத்தையெல்லாம், வந்தவன் வார்த்தையை நம்பி இழந்தான். வாழ்வையும் இழந்தான். போலியை உண்மையென நம்பினான். பணம் அவனைப் பாழாக்கியது. அவன் உழைத்துக் கஷ்டப்பட்டு சம்பாதித்து இருந்தால், அவன் கெட்டிருக்கமாட்டான். திடீரென்று வந்தது திடீரென்று ஆளை மாற்றி அழித்தே விட்டது.

தன்னிடம் வேலை பார்த்தவனிடம் வேலை வாங்கியிருந்தால், அவன் அழிந்திருக்க மாட்டான். தந்திர ‘மூளை’ வாங்கப் போயல்லவா மாட்டிக் கொண்டான்! தன் கீழ் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டு, செயல்பட்டு, நற்பெயரையும் கைப் பொருளையும் இழந்தவர்கள் அநேகம் பேர். ஏதோ தனக்குச் சிறிது லாபம் கிடைக்கும் என்பதற்காக உபகாரம் செய்வது போல வேஷம் போடும் வேலைக்காரர் விடுகிற ‘கரடிகளை’ புளுகுகளை நம்பி, ஏமாந்து, நண்பர்களையும் பகைவர்களாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். அவர்களிலே ஒருவனாகி விட்டான்.