பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

43


ஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. மஞ்சளாக இருந்த பற்களின் மீது கருப்பாக இருந்த புண்ணாக்குப்படிவம் படிந்து, புதிய தோற்றத்தை அளித்துக்கொண்டிருந்தது, பல் தெரியச் சிரித்த புருஷனை, பளார் என்று அறையலாமா என்றுகூட நினைத்தாள் அலமு.

கரும்பு தின்றால் பற்களின் கறை போகும், வாய் நாற்றம் கூட மறையும் என்று திட்டம் போட்டுத் தங்கம் அனுப்பப்போக, புண்ணாக்கு வாங்கித் தின்று, மேலும் அதை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.

‘ஊருக்குப் போகும் பொழுது உன் அம்மாவிற்கு செங்கரும்பு வாங்கிக்கொண்டு போக வேண்டும். மறந்து போய் விடாதே’ என்று மனைவியிடம் கூறியபடியே புண்ணாக்கை சுவைத்துக் கொண்டிருந்தான் அவன். அலமு விக்கித்துப்போய் நின்றாள்.

நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். மாமியார் ஒன்று நினைக்க மருமகன் ஒன்றை நினைத்தான். மறுபடியும் கணவன் மனைவிக்குள் கலாட்டா தொடர்ந்தது. திருவிழாவிலே அடிதடிசண்டை ஏற்பட, ஆளுக்கொருவராக பிரிந்து போனார்கள். அப்புறம் ஒன்று சேரவே இல்லை.

தங்கம் திட்டம் போட்டு, மனதுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டு செலவு செய்ததற்குப் பதிலாக, நேரே சொல்லியிருந்தால், நேரமும் மீதியாயிருக்கும். நினைத்ததும் நடந்திருக்கும்.

இப்படித்தான், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கப் போய், உதை வாங்கி வருந்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.