பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கனவு காண்பவர்கள் வாழ்க்கை, புயல் முன்னே பூங்கொடி போல முறிந்து வீழ்ந்து அழிகிறது.

திடமான தேகம் உள்ளவர்களால்தான், திறமாக, தைரியமாக வாழ்க்கையை சந்திக்க முடிகிறது. பிரச்சினைகளைத் தெளிவாக சிந்திக்க முடிகிறது.

திடமான தேகம் தான் வாழ்க்கை மாளிகையின் அஸ்திவாரமாகும். அதன்மேல்தான் வாழ்க்கையின் ஆசைக் கனவுகள் பரப்பப்படுகின்றன. நிரப்பப்படுகின்றன. தேவைகள் திரட்டப்பட்டு சேர்க்கப்படும் பொழுது, தீர்த்து வைக்க இயலாத நிலையில் தேகம் இருக்குமானால், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல்தான் என்றும் நாம் கூறலாம்.

திடமான தேகத்திற்கு அடிப்படை, நலம் வாய்ந்த நிலைதான். அதுவே வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்லும் வல்லமையை அளிக்கிறது. அத்துடன் வழி நடைப் பயணத்தில் பத்திரமான பாதுகாப்புத் தன்மையையும் வழங்குகிறது.

அந்தப் பாதுகாப்புத் தன்மையே அவனுக்கு பெரும்பலத்தைக் கொடுக்கிறது. அந்தப் பலமே, அவன் கொண்டிருக்கும் ஆசைக் கனவுகளை நிறைவேற்றுகின்ற ஆற்றலைக் கொடுத்து, நம்பிக்கைகளை நனவாக்கிக் காட்டுகிறது. அதனால்தான் உடல் நலம் நிறைந்தவர்கள், உலகிலேயே சிறந்த செல்வர்கள் என்று பெருமையுடன் புகழப்படுகின்றார்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை தெரியுமா?