பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அவ்வாறு இயங்குகின்ற உடலை நாம் அற்புதப் பெட்டகம் என்று போற்றிக்காத்துக் காப்பாற்றி வந்தால் தான், உடலும் செழிப்பாக இருக்கும். வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு உடல் செழிப்பாக வளர நாம் அன்றாடம் ஒரு கடமைகளை, பழக்க வழக்கங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து வரவேண்டும். அப்பொழுதுதான் உடல் நலியாது. மாறாக, நல்ல மென்மையுடனும் மேன்மையுடனும் பொலிவு பெற்றுத் திகழும்.

நோயில்லாமல் வாழலாம் என்று நாம் கூறுகின்ற நேரத்தில், நோய்வருவதற்கு முன்னே வராமல் காத்துக்கொண்டு வாழ்தல், வந்தபின் தடுத்தல், மூன்றாவது நிலை தடுத்துக் கொண்டே வாழ்தல் என்றும் நாம் கொள்ளலாம். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை நெருப்பின் முன்னே போட்ட வைக்கோல் போல விரைவில் எரிந்து சாம்பலாகும்.

அதுபோலவே, நோயைப் பற்றியும் உடலைப் பற்றியும் புரிந்து கொள்ளாதவனின் வாழ்க்கை. இருந்தும் இல்லாமல் அவதிப்படுபவனாக முடியும். அதற்கேற்ற அன்றாடப் பழக்க வழக்கங்களை மட்டுமே இந்தப் பகுதியில் விவரிக்க இருக்கின்றோம்.

அவற்றில் மிக முக்கியமானவையாக இங்கே விளக்க இருக்கின்றவை - உணவு முறை, உடை அணிதல், உறக்கம், குளியல், உடற்பயிற்சி, வேண்டாத பழக்கங்கள் என்ற தலைப்புகளில் அமையும். மிக எளிமையாக மேற்கொள்கின்ற வழி முறைகளையே இப்பகுதியில் தொடர்ந்து தர இருக்கின்றோம். அடுத்தப் பகுதியில் உணவும் குணமும் என்ன என்பதை காண்போம்.