பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பிறரது வற்புறுத்தலுக்காக அல்லது இனிமேல் இப்படி நமக்குக் கிடைக்கப் போகிறதா என்ற நினைவுக்காக, வயிறு முட்ட உண்டு விடக்கூடாது. அந்த நிலையில் ஜீரண உறுப்புகள் தளர்ந்தும், பாதிக்கப்பட்ட செயற்பாடும் கொண்டதாக விளங்குவதால், அது ஜீரண மண்டலத்தையே பாதிக்கவும் செய்யும். ஆகவே போதுமான அளவை இதுபோன்ற சமயங்களில் உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும்.

5. ஒவ்வொரு உணவு வேளைக்கும் இடையில் போதிய அவகாசம் தர வேண்டும். வயிற்றில் உணவு ஜீரணமாக குறைந்தது 3 மணி நேரம் ஆகிறது என்கிற அடிப்படையில் பார்த்தாலும். கண்டதையெல்லாம் சாப்பிடுகிறவர்களின் கதி என்ன ஆகும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

6. ‘கொஞ்சமாக சாப்பிடுங்கள். நிறையவே சாப்பிடலாம்’ என்பது சீனப் பழமொழி. அதாவது வயிற்றைக் கனமாக ஆக்கிக் கஷ்டப்படுத்தாமல். கொஞ்சமாகக் குறைத்து நீங்கள் சாப்பிட்டால், நிம்மதியாக நோய் வராமல், நீண்டநாள் வாழ்வீர்கள். நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நிறையவே சாப்பிடலாம் அல்லவா!

அல்லாவிடில் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றுக்கு ஆளாகி, அத்தனை அவஸ்தைகளையும் ஆரோகணித்துக் கொண்டு அல்லல்பட அல்லவா நேரிடுகிறது. மலச்சிக்கல்தான் உடல் சிக்கல் அத்தனைக்கும் மூலகாரணமாகும். அஜீரணம் அதன் அடிப்படை ஆதாரமாகும்.