பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

7


1. இனிப்பும் நினைப்பும்

அடர்ந்து செழித்த பெருங்காடு அது. அதன் நடுவிலே ஒருவன் அவனையறியாமல் போய் சிக்கிக் கொண்டான். வெளியே வர முயன்றால், வருவதற்கும் வழி தெரியவில்லை. வேறு விவரமும் புரியவில்லை.

அவன் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வீணாகின்றனவே தவிர, விடிவினைத் தரவில்லை. மேலாக, மேலும் மேலும் அவனைக் குழப்புகிறது. வேறொன்றும் அறியாதவனாக அவன் மருண்டு நடக்கிறான். மயங்கி நிற்கிறான்.

வானளாவிய மரங்கள், அவைகளை ஆரத்தழுவித் தொங்கிக் கிடக்கும் தோரணம் போன்ற பசுங்கொடிகள். கொடிகளிலே மறைந்து தொங்கும் கொழுத்தக் கனிகள். அவற்றை அணைத்து அணைத்துக் குலுங்கிக் காட்டும் இலைகள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற தோற்றம். ஏற்றம். கலையாட்டம். வளத்தோட்டம்.

எத்தனையோ அழகுகளை இயற்கை காட்டினாலும், அவன் கண்கள் அவற்றைக் காணத் தயாராக இல்லை. கவர்ச்சிகளை ரசிக்கும் நிலையிலும் அவனது மனோநிலை இல்லை. கானகத்தை விட்டு வெளியே வந்து விட்டால் போதும் என்ற வெறி மட்டும் அவனை விடாப்பிடியாக விரட்டிக் கொண்டிருக்கிறது. தனிமை தரும் பயமோ மேலும் அவனைத் தள்ளாடச் செய்த வண்ணமிருக்கிறது.

வேகமாக நடக்கிறான். எதிரே கிடக்கும் பாதை அவனுக்கு என்னவென்று தெரியவில்லை. ஏதாவது தடம்