பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

95


பொறுப்பை குளியல் மேற் கொள்கிறது. இவ்வாறு தினந்தோறும் குளிக்காமல் விட்டு விட்டால், தேகத்தில் அழுக்கு கூடிக் கொண்டே போகப் போக, தேடாமல் வந்து சேரும் திரவியமாக துர்நாற்றம் கூடி, உடல் தூய்மையைத் தொலைத்து விடுகின்றது.

அழுக்கை நீக்கி விடுவது மட்டுமல்ல. அன்றாடம் மாறுபட்டுப் போகும் தட்பவெப்ப நிலைக்கு உடலை சமபடுத்திக் கொள்ளவும் குளியல் பயன்படுகிறது. அத்துடன் அல்லாமல், மேற்புறப் பகுதிக்கு ஒருபடி கவர்ச்சியான தன்மையையும் குளியல் அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியையும், புதுத் தெம்பையும் ஊட்டுகிறது. சோம்பலை விரட்டுகிறது.

இத்தனையும் எப்படி ஏற்படுகிறது? தோலின் உட்புறத்திலே பலவிதமான மெல்லிய இரத்தக் குழாய்களும் நரம்பு மண்டல இணைப்பும் இருப்பதுதான். அவையெல்லாம் சீராகவும், செழுமையாகவும் செயல்படத்தான் தூய்மை அவசியம் தேவையாகும்.

குளியலானது தோலை நலத்துடன் இருத்திட உதவுகிறது. இந்தக் குளியல் உடலுக்கு ஒருவிதமான சுகானுபவத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறது.

காலையில் நீராடல் என்கிறோம். வெந்நீரா, தண்ணீரா என்று கேட்பவர்கள் உண்டு, குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் வெந்நீரைப் பயன்படுத்தியே ஆக வேண்டியிருக்கிறது. அங்கேயும் தண்ணீரில் குளிக்கின்ற மன வல்லமை மிகுந்தவர்களும் இருக்கத்தான் இருக்கின்றார்கள்.