பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

காலை வரையில் வேறு ஒன்றும் புசியாது இருப்பதாம். நமது தேசத்தில் மாத்வ பிராம்மணர்கள் ஏகாதசி தினங்களில் இந்த ஒரு பொழுதை சரியாக அனுஷ்டித்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் ஆண் பெண் குழந்தை உட்பட இரவில் பட்டினி இருந்து மறு நாள் காலைதான் போஜனம் கொள்வார்கள். இதற்கு 'பாரணை' என்று பெயர். மற்ற ஜாதியார்களில் அநேகர் இந்த பழங்கால வழக்கத்தைவிட்டு ஒருபொழுது என்றால் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து அதற்கு பதிலாக பாதம் அல்வா, ஜிலேபி, லட்டு, போளி, அதிரசம் முதலிய அவர்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா தின்பண்டங்களையும், தலையணை உரையில் பஞ்சை துருத்துவதுபோல் வயிற்றில் எல்லாவற்றையும் போட்டு நிரப்புகிறார்கள். இது பெரும் தவறாகும். வயிற்றுக்கு ஓய்வு கொடுப்பது போய் இரட்டிப்பு வேலை கொடுப்பதாகும். இது எப்படி ஒருபொழுதாகும்? இதையெல்லாம் கருதி நம்மவர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு நாளாவது ஒரு வேளை புசித்து மறுவேளை பட்டினி இருத்தல் நலமாம். சென்னையில் ஒரு பிரபல வயித்தியர் பெளர்ணமி தினங்களில் காலை முதல் ஒன்றும் சாப்பிடாதிருந்து சாயங்காலம் பூர்ண சந்திரனை பார்த்த பிறகே புசிக்கிற வழக்கத்தை கைப்பற்றி வருகிறார் என்பதை நான் அறிவேன். அவர் இப்பொழுது ஏறக்குறைய 80 வயது ஆகியும் நல்ல தேக ஸ்திதியில் இருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் 'லங்கணம் பரம ஒளஷதம்' என்னும் ஆரிய வைத்தியர்களுடைய கோட்பாடு கவனிக்கத்தக்கது. நம்மவர்களுள் சிலர் சில முக்கிய தினங்களில் பலகாரம் செய்வதாகச் சொல்லுகிறார்கள்; பலகாரம் என்றால் பழத்தையே ஆகாரமாக கொள்ளுதல் என்னும் அர்த்தமாகும். சர்க்கரை பொங்கல், புளியோரை, ததியோதனம் முதலியவற்றை சாதாரண சாப்பாட்டிற்கு பதிலாக உண்ணுதல் பலகாரம் செய்வது ஆகாது. பாலும் பழமுமே சாப்பிடு தல் பலகாரம் ஆகும்.

மோர் அருந்துதல்:-

மேற்சொன்ன முக்கிய விதிகளின்றி நம்மவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கைப்பற்றி வரும் சில சிறு வழக்கங்களைப் பற்றி கூற விரும்புகிறேன். போஜனத்திற்கு உட்கார்ந்தால் முதலில் நெய் அன்னம், பிறகு குழம்பு அன்னம், பிறகு ரசம் கலந்த அன்னம் அப்புறம் பாயசம் அல்லது தித்திப்பு உண்டி கடைசியாக தயிர் அல்லது மோர் சாப்பிடுவது வழக்கமாயிருக்கிறது.