இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெற்றி வேற்கை
(அதிவீரராம பாண்டியர்)
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
வெற்றி வேற்கை வீரராமன்,
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்—தமிழ் தெரிந்த நறுந்தொகைதன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே.
வாழிய, நலனே! வாழிய, நலனே!
நூல்
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.1
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.2
செல்வர்க்கு அழகு செழுங் கிளை தாங்குதல்.3
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.4
மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை.5
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்.6
உழவர்க்கு அழகு இங்கு உழுது, ஊண் விரும்பல்.7
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.8
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை.9
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.10