உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ளவேண்டாம்;
      அது ஏது இங்கு என்னின், நீ, சொல்ல, கேளாய்;
தஞ்சமுடன் வண்ணான், நாவிதன், தன் கூலி;
      சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி:
வஞ்சம் அற, நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி:
      மகா நோவுதவைத் தீர்த்த மருத்துவன்தன் கூலி;—
இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை
      ஏது ஏது செய்வானோ, ஏமன்தானே!11

கூறக்கி ஒருகுடியைக் கெடுக்கவேண்டாம்;
     கொண்டைமேல் பூத்தேடி முடிக்கவேண்டாம்;
தூறாக்கித் தலையிட்டுத் திரியவேண்டாடாம்;
     துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்கவேண்டாம்;
வீறான தெய்வத்தை இகழவேண்டாம்;
     வெற்றி உள்ள பெரியோரை வெறுக்கவேண்டாம்;—
மாறான குறவருடை வள்ளி பங்கன்
     மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!12

ஆதரித்துப் பல வகையால் பொருளும் தேடி,
     அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி.
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
     உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி;
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்;
     கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று, மிக வாழ்ந்து, புகழும் தேடி,
     பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.13