25
உள்ளது ஒழிய, ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா, குவலயத்தில்; வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரை ஏறினால் என்,
உடலோடு வாழும் உயிர்க்கு?6
எல்லாப் படியாலும் எண்ணினால், இல் உடம்பு
பொல்லாப் புழு, மலி நோய்ப் புண் குரம்பை: நல்லார்
அறிந்திருப்பார்; ஆதலினால், ஆம் கமல நீர்போல்,
பிறிந்திருப்பார்; போசர், பிறர்க்கு.7
ஈட்டும் பொருள் முயற்சி எண் இறந்த ஆயினும், ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்; தேட்டம்
மரியாதை காணும்;—மகிதலத்தீர்!—கேண்மின்;
தரியாது காணும், தனம்.8
ஆற்றுப் பெருக்கு அற்று, அடி சுடும் அந் நாளும். அவ் ஆறு
ஊற்றுப்பெருக்கால் உலகு ஊட்டும்; ஏற்றவர்க்கு,
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்,
'இல்லை' என மாட்டார், இசைந்து.9
ஆண்டு ஆண்டுதோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவரோ?—மாநிலத்தீர்!—வேண்டா;
நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்.
'எமக்கு என்' என்று, இட்டு, உண்டு, இரும்.10
'ஒரு நாள் உணவை ஒழி' என்றால், ஒழியாய்;
'இரு நாளுக்கு ஏல்' என்றால், ஏலாய்; ஒரு நாளும்
என் நோ அறியாய்:—இடும்பை கூர் என் வயிறே!—
உன்னோடு வாழ்தல் அரிது.11
ஆற்றங்கரையின் மரமும். அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும் அன்றே; ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்;
பழுது உண்டு, வேறு ஓர் பணிக்கு.12
ஆவாரை யாரே அழிப்பர்? அது அன்றி,
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்,
ஐயம் புகுவாரை யாரே விவக்குலார்?—
மெய், அம் புவிஅதன் மேல்.13