உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீதிநெறி விளக்கம்
(குமரகுருபர சுவாமிகள்)

கடவுள் வாழ்த்து

நீரில் குமிழி, இளமை; நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந் திரைகள் நீரில்
எழுத்து ஆகும். யாக்கை, நமரங்காள்! என்னே,
வழுத்தாதது எம்பிரான் மன்று?

நூல்

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்:
புறங்கடை நல் இசையும் நாட்டும்; உறும் கவல் ஒன்று
உற்றுழியும், கைகொடுக்கும்;—கல்வியின் ஊங்கு இல்லை,
சிற்றுயிர்க்கு உற்ற துணை.1

தொடங்குங்கால் துன்பம் ஆய், இன்பம் பயக்கும்,
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி; நெடுங் காமம்
முன் பயக்கும் சில் நீர இன்பத்தின்,—முற்றிழாய்!—
பின் பயக்கும் பீழை பெரிது.2

கல்வியே கற்புடைப் பெண்டிர், அப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீம் கவியா, சொல் வளம்
மல்லல் வெறுக்கையா, மாண் அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு, சிலர்க்கு.3

எத் துணைய ஆயினும் கல்வி, இடம் அறிந்து,
உய்த்துணர்வு இல் எனின், இல்லாகும்; உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்று எனின், என் ஆகும்? அஃது உண்டேல்,
பொன் மலர் நாற்றம் உடைத்து.4

அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும், கல்லார்
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும். தவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும், நல்கூர்ந்தார் இன் நலமும்.—
பூத்தலின் பூவாமை நன்று.5