பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நல்லவனாக இருக்க முடியும்.! உன் தந்தை என் நண்பர் என்று சொன்னேனல்லவா? உட்கார். அவர் முன்பு அடிக்கடி என்னை வந்து பார்த்துவிட்டுப் போவார். கடைசியாக நானும் அவரும் பேசிக் கொண்ட விஷயங்களை உனக்குச் சொல்கிறேன்!” என்றாள் வனக்கிழவி.

"அம்மா தேவதையே! இன்று முழுவதும் நான் சாப்பிடவேயில்லை. தயவு செய்து முதலில் எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டுப் பிறகு உங்கள் கதையைச் சொல்லுங்கள். நான் கவனிக்கிறேன்.” என்றான் நெடுமாறன்.

"ஐயோ பாவம்! இப்போதே உனக்கு ஏதாவது கொடுக்கிறேன். நீ சாப்பிடும்போதே நான் என் கதையைச் சில சொற்களில் முடித்துவிடுகிறேன். நான் எப்போதுமே அதிகம் பேசுவதில்லை. மூக்கு நீண்டதாயிருந்தாலும் பாதகமில்லை. வாய் நீளக் கூடாது என்பார்கள். நான் சிறுமியாக இருந்தபோது, நான் அதிகம் பேசுவதில்லை. இதற்காக மக்கள் என்னைப் பெரிதும் பாராட்டிப் பேசுவார்கள். அவர்கள் என் தாயிடமே என் வாயடக்கத்தைப் பற்றிப் புகழ்வார்கள். என் தாய் ஒரு மகாராணி! நான் ஒரு ராஜகுமாரி! என் தந்தை...”


"ஏன் உங்கள் அப்பா பசித்தால் சாப்பிடுவதில்லையோ?” என்று கேட்டான் நெடுமாறன் பசி தாங்காமல்.

"நன்றாகச் சாப்பிடுவார்! இதோ உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், என் அப்பா..."

“பாட்டி! நான் சாப்பிடுவதற்கு முன்னால் எதையும் கேட்கப்போவதில்லை! நான் வயிறு நிரம்பாத வரை என் காதுகள் திறக்காது!" என்று நெடுமாறன் சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவன் சட்டென்று வாயை அடக்கிக் கொண்டான் . ஏனெனில், தேவதையின் உதவி அவனுக்குத் தேவையாக இருந்தது!