பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

வாழ்ந்து வருகிறோம். நாமும் நம் குழந்தைகளும் பசியின்றி வாழ ஏதாவது வழி செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வது என யோசிக்க வேண்டும். எனக்கோ அரசனாக இருப்பதைத் தவிர வேறு எவ்விதமான தொழிலும் வேலையும் தெரியாது. அரசனாக இருப்பது தான் எளிதான வேலை!" என்று சொன்னார்.

அகங்காரவல்லபி சுயநலக்காரி, குயுக்தியுள்ளம் படைத்தவள். அவள் இதைப் பற்றி ஒருவாரம் வரை யோசனை செய்துவிட்டு தன் கணவரான அசமந்த ராஜரிடம், "நாம் கவலைப்பட் வேண்டியதில்லை. ஏனென்றால் எனக்கு வலை பின்னத் தெரியும். வலையைக் கொண்டு நாம் மீன்களையும் பறவைகளையும் பிடித்துவிடலாம். உங்கள் முதல் தாரத்துப் பெண்களோ சோம்பேறிகளாக இருக்கிறார்கள். இன்னும் அவர்களிடமிருந்து தாங்கள் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அகங்காரம் போகவில்லை. நம்மிடம் திரும்பி வராதபடி வெகு தூரத்திற்கு அவர்களை நாம் அனுப்பிவிட வேண்டும்." என்றாள்.

இந்த யோசனை அசமந்த ராஜரை மனம் குழம்பச் செய்தது. அவருக்கோ தம் புதல்விகளிடம் பாசம் அதிகம். அவர்களைப் பிரிய அவர் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் மனைவியோ பேசிப் பேசி அவரைத் தன் யோசனைக்கு இணங்க வைத்துவிட்டாள். அதன்படி பெண்கள் இரண்டு பேரையும் அகங்காரவல்லபி மறுநாளே அழைத்துக் கொண்டு சென்று தான் போதுமென்று நினைக்கின்ற அளவு துரத்தில் விட்டு விடுவதென்று முடிவு செய்தார்கள். கடைசி மகளான இளவரசி சந்திரிகா தன் பெற்றோர்கள் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து கேட்டுவிட்டாள். ஆகவே அவள், பாலும் சோறும் எடுத்துக் கொண்டு தன் காவல் தெய்வமாகிய தேவதை அருளுடையாளைத் தேடிப் புறப்பட்டாள்.