பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அவளுடைய அக்காள் இருவரும், தாங்களே மரத்தின் உச்சியில் ஏறிப் பார்க்கும்வரை அதை நம்ப மறுத்து விட்டார்கள்.

அந்த மாளிகையில் செல்வ மிகுந்த இளவரசர்கள் யாரும் இருக்கலாமென்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே, சந்திரிகா துரங்கும்போது, அவளுடைய விலையுயர்ந்த ஆடைகளை அவர்கள் இருவரும் அணிந்து கொண்டு, வைரங்களையும் எடுத்து வைத்துக் கொண்டார்கள். தூங்கி எழுந்த சந்திரிகா அவர்களுடைய அலங்காரங்களைக் கண்டு, தனக்கும் ஏதாவது நல்ல ஆடைகள் கொடுக்க வேண்டுமென்றும், தான் ஒரு பிச்சைக்காரியைப் போல் அவ்வளவு பெரிய மாளிகைக்கு வருவது நன்றாக இருக்காது என்றும் கேட்டாள். ஆனால் அக்காள்கள் இருவரும் சிரித்து விட்டு, அவள் மேற்கொண்டு எதுவும் பேசினால், அடிப்பதாக மிரட்டினார்கள். ஆகவே சந்திரிகா ஒரு வேலைக்காரியைப் போல, எவ்விதமான நல்ல ஆடைகளுமின்றி அவர்கள் பின்னால் சென்றாள். அந்த மாளிகைக்குப் போனதும் தாங்கள் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்றும், சந்திரிகாவைச் சமையல் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், காந்தாரியும் மங்களநாயகியும் வழியில் பேசிக் கொண்டு சென்றார்கள். சந்திரிகா தங்கள் தங்கை என்று யாரும் தெரிந்து கொள்ளாதபடி மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் திர்மானித்துக் கொண்டார்கள்.

அவர்கள் அந்த மாளிகையை நெருங்க நெருங்க அது மிகவும் பெரிதாகத் தோன்றியது. அவர்கள் அதன் முன் வாசற் கதவைத் தட்டியபோது ஒரு பயங்கரமான கோர உருவமுடைய கிழவியொருத்தி வந்து கதவைத் திறந்தாள். அவளுடைய அவலட்சணமான முகத்தில், நெற்றியின் நடுவில் ஒரே ஒரு பெரிய கண் இருந்தது. அவள் பதினைந்து அடி உயரமும் முப்பதடி அகலமும் இருந்தாள்.