பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

நினைத்தார்கள். வழியில் நின்ற படைவீரர்கள் அவளைக் கண்டவுடன், அணிவகுப்பு மரியாதை செய்தார்கள்; காவலர்கள், கைதூக்கிச் சலாம் செய்தார்கள். வீரர்கள் முரசு கொட்டினார்கள். கோட்டை வாசற் கதவுகள் அவளைக் கண்டவுடன் எவ்விதமான கேள்வியுமில்லாமல் உடனடியாகத் திறந்தன.

சந்திரிகா நேராகச் சென்று இளவரசன் நோயாகப் படுத்திருக்கும் அறையினுள் நுழைந்தாள். அங்கேயிருந்த செருப்பைத் தன் ஒற்றைக் காலில் போட்டுக் காண்பித்து, தன் வசமிருந்த அதன் ஜோடியையும் மற்றொரு காலில் போட்டுக் கொண்டு, அதற்குரியவள் தான்தான் என்பதை மெய்ப்பித்துக் காட்டினாள்.

"இளவரசர் சுந்தராங்கதர் நீடுழி வாழ்க அவரை மணந்து எங்கள் அரசியாகப் போகும் இளவரசி நீடுழி வாழ்க!” என்று அங்கிருந்தவர்கள் கூவினார்கள்.

அவளைக் கண்ட இளவரசன் சுந்தராங்கதன் அப்படியே மயங்கிப் போய் விட்டான். அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சந்திரிகா அழகாக இருந்தாள். சுந்தராங்கதன் எழுந்து வந்து சந்திரிகாவின் கையை அன்போடு பற்றிக் கொண்டான். அப்போதே அவனுடைய நோய் முழுவதும் பறந்து போய்விட்டது. சந்திரிகாவை அரசி தன் மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். “என் மகனைக் காப்பாற்றிய நீயும் எனக்கொரு மகள்தான். ஆனால் மருமகள்!” என்று ஆனந்தத்தோடு கூறினாள். அதிசயமான வெகுமதிகளையும் பரிசுகளையும் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தார் அந்த நாட்டின் அரசர். இந்த இன்ப நிகழ்ச்சியை நாடெங்கும் அறிவிக்கப் பீரங்கிகள் வெடி முழக்கமிட்டன. எங்கும் சங்கீத இன்ப நாதம் எழும்பியது. அந்த நாட்டில் இருந்த ஆடவர் பெண்டீர் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.