பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

போய் விட்டாலும் நான் மறுபடியும் பணக்காரனாகி விடுவேன். ஏனென்றால் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நான் துன்பப்படுவதை ஆற்றமாட்டார்கள். எனக்காக் நீரிலும் நெருப்பிலும் குதிக்கவும் தயாராக இருப்பதாக அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தான் அரசன்.

"நீங்கள் அதை நம்பிக் கொண்டிருக்க முடியாது” என்றான் கறுப்புச் சட்டைக்காரன்.

அன்று மாலை விருந்து நடக்கும்போது, அரசன் விருந்தாளிகளை நோக்கி, "நண்பர்களே, எனக்காக நீரிலும் நெருப்பிலும் குதிப்பதாக நீங்கள் அடிக்கடி கூறி வந்திருக்கிறீர்கள். ஆனால் நான் அதை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று கறுப்புச் சட்டைக்காரன் கூறுகிறான். அவனுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான்.

உடனே அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் "கறுப்புச் சட்டைக்காரன் அயோக்கியன்!” என்று கூறிக் கூச்சலிட்டார்கள். "அரசே! அவன் உங்களிடமிருந்து கொள்ளையடித்துவிட்டு உங்களையே ஏமாற்றுகிறான். அவனை நம்பாதீர்கள்!” என்று அவர்கள் எல்லோரும் கூறினார்கள்.

உடனே ஏழு தங்கப் பசு மன்னன் கறுப்புச் சட்டைக்காரனை அழைத்து வரச் செய்தான்.

"நீ என்னிடமே கொள்ளையடிக்கும் திருடன் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது உண்மைதானே?" என்று கேட்டான்.

அதை அந்த கறுப்புச் சட்டைக்காரன் சிறிதுகூட மறுக்கவில்லை. “உண்மைதான் அரசே! நான் உங்களிடம் திருடியது உண்மைதான்!” என்று ஒப்புக் கொண்டான்.