பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

மன்னன். வைகாசி மாதம் பெளர்ணமியன்று மாலையில் அவன் கறுப்புச் சட்டைக்காரனை நோக்கி "இன்று நள்ளிரவில், இரண்டு பெரிய அண்டாக்களும், ஆறு தோல் பைகளும் புல்லாங்குழலும் எடுத்துக் கொண்டு, ஆற்றங்கரைச் சமவெளிக்கு நீ என்னோடு வரவேண்டும்” என்றான்.

அதன்படியே, அன்று நள்ளிரவு நேரத்தில் கையில் புல்லாங்குழலும், அண்டாக்களுடனும், பைகளுடனும் ஐராவதியாற்றின் கரையிலிருந்து சமவெளிப் பிரதேசத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். "இப்போது நான் சொல்லிக் கொடுத்த அந்த இராகத்தை புல்லாங் குழலில் வாசி" என்று கட்டளையிட்டான் அரசன்.

கறுப்புச் சட்டைக்காரன், அரசனின் கட்டளைப் படியே குழலை ஊதினான். உடனே அவர்களுக்கு எதிரில் இருந்த தரை இரண்டாகப் பிளந்தது. பூமியின் அடியிலிருந்து ஏழு உயிருள்ள தங்கப் பசுக்கள் வெளியில் வந்தன. அவை, அரசன் முன் தலை வணங்கி நின்றன. “இந்தப் பசுக்களின் அருகில் அண்டாக்களைக் கொண்டு வந்து வைத்துப் பால் கற" என்று கறுப்புச் சட்டைக் காரனுக்கு அரசன் உத்தரவிட்டான். அதன்படி கறுப்புச் சட்டைக்காரன் இரண்டு அண்டாக்களும் நிறையும்வரை பசுக்களின் மடியிலிருந்து பால் கறந்தான். அந்தப் பால் முழுவதும் தங்க நாணயங்களாய் மாறின. "இந்தத் தங்க நாணயங்களைப் பைகளிலே போட்டுக் கட்டு” என்றான் அரசன். அவ்வாறு கட்டி முடித்ததும், ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி அந்த இடத்தில் பைகளை ஆற்றுக்குள் போடும் படி சொன்னான் அரசன். கடைசிப் பையையும் போடப்பட்டவுடன் பொழுது விடிந்துட்டது. அந்த ஏழு தங்கப்பசுக்களும் பூமியின் அடிவாரத்திற்குப் போய் மறைந்து விட்டன. பூமியும் மறுபடி மூடிக் கொண்டது.