பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

அரக்கன் குரலைக் கேட்டதும் ஆச்சரியமடைந்தவன் போல் தலை நிமிர்ந்து பார்த்த சமயோசிதம், "ஐயா! சாப்பாட்டிற்காக குழம்பு வைத்துக் கொண்டிருக்கிறேன், இப்போதுதான் ஒரு கொதி வந்திருக்கிறது!" என்றான்.

"முட்டாளே! அடுப்பில்லாமல், நெருப்பில்லாமல் புல்தரையின் மீது வைத்துக் கொண்டு எப்படி குழம்பு வைப்பாய்?" என்று உறுமினான் அரக்கன்.

"ஐயா! உங்களுக்கு விஷயம் தெரியாது. இது ஒரு மாயச் சட்டி. இது நெருப்பில்லாமலே எதையும் சமைக்கக் கூடியது. ஒன்றிரண்டு நிமிடங்கள் இதைச் சவுக்கினால் அடித்தால் போதும். உடனே, கொதி வந்து உள்ளேயிருக்கும் பொருள் வெந்து சமையலாகி விடும்" என்றான் தோட்டக்காரன்.

"பொய்! பொய்! வடிகட்டின பொய்!” என்று சொல்லிக் கொண்டே நெருங்கி வந்து குழம்புச் சட்டியை நோக்கினான் அரக்கன். அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த சட்டியாகையால், அதில் இருந்த குழம்பு தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்தது. கறியின் வாசனையோடு ஆவி வந்து கொண்டிருந்தது! அரக்கனுக்குத்தான் இன்னும் சாப்பாடு முடிக்கவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது: "நான் இந்தச் சட்டியைக் கொண்டு போகிறேன். எனக்கு இது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்" என்று சொன்னான் அரக்கன்.

"ஐயா, விறகு விலை அநியாயமாயிருக்கிறது. என் சட்டியை விட்டுவிட்டு நான் என்ன செய்வேன்?” என்று வருத்தப்படுபவன் போல் நடித்தான் சமயோசிதம்.

"சமைக்காமலே சாப்பிடு!” என்று அரக்கன் அகங்காரத்தோடு கூறிவிட்டு அருகில் கிடந்த கந்தையை எடுத்துக் கொதிக்கின்ற அந்தச் சட்டியைக்-