பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

குழம்போடு சேர்த்துத் தூக்கிக் கொண்டு மலை மேலிருந்த தன் மாளிகைக்குச் சென்றான். அவன் தலை மறைந்தவுடன் சமயோசிதமும் அவன் குடும்பத்தினரும் விலா நோகச் சிரித்தார்கள்.

அரக்கன் தன் மாளிகைக்குப் போய்ச் சேரும் சமயம், சட்டி சூடு தணிந்து விட்டது. எத்தனை முறை சவுக்கால் அடித்தும் அது திரும்பக் கொதிக்கவில்லை. அரக்கனுடைய மடத்தனத்தைக் கண்டு அவனுடைய வேலைக்காரன் வாய்க்குள் சிரித்துக் கொண்டான். அரக்கி பெருவாய் பேச்சியோ வெளிப்படையாகவே அவனை, “முட்டாள்! முட்டாள்!" என்று புத்தி வரும் படியாகத் திட்டினாள். குழம்புச் சட்டியைச் சவுக்கால் அடித்து அடித்து அரக்கனுடைய கை வலித்துவிட்டது. கடைசியில் அவன் ஆத்திரத்தோடும் கோபத்தோடும், "இருக்கட்டும். நாளைக்கு அந்தத் தோட்டக்காரப் பயலை என்ன பாடுபடுத்துகிறேன் பார்! அவன் இந்த உலகத்தில் பிறந்ததே தப்பு என்று நினைக்கும்படியாகச் செய்து விடுகிறேன்” என்று வஞ்சினம் கூறினான். -

மறுநாள் அதிகாலையில் மலைப்பக்கம் காவல் இருந்த சழயோசிதத்தின் பெரிய பையன் ஓடிவந்து பொரும் பீதியோடு "அப்பா! அப்பா அரக்கன் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று கூவினான்.

எப்படியும் அரக்கன் திரும்பி விடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயோசிதம், செத்துப்போன பசு மாட்டின் இரத்தத்தை நிரப்பி வைத்திருந்த குடல் பையை எடுத்துத் தன் மனைவி யின் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டான். பிறகு சேலை முந்தானையால் அதை மூடி மறைத்துக் கொள்ளச் செய்தான்.