பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தன் பலம் கொண்ட மட்டும் காலைத் தூக்கி ஓங்கி பூனையின் வாலைக் குறி பார்த்துத் தவறாமல் மிதித்து விட்டான். உடனே பூனை பயங்கரமாகக் கத்திக் கொண்டு துள்ளிப் பாய்ந்தது. அதே சமயத்தில் அது மனித உருவம் அடைந்தது. பூனையாக இருந்தது பொல்லாத மந்திரவாதிதான்! அந்த மந்திரவாதி தன் கண்களில் நெருப்புப் பொறி பறக்க பத்திரகிரி ராஜனை ஏறிட்டு நோக்கி, "என் மந்திரத்தை உடைத்து விட்டபடியால், இதுவரை இளவரசியை மணந்து கொள்ள முடியாமல் இருந்த நீ இப்போது அவளைத் திருமணம் செய்து கொள்ளுவாய்! ஆனால் உன்னைப் பழி வாங்காமல் விட என் மனம் இடங் கொடுக்கவில்லை. உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவன் தன் மூக்கு மிக நீளமாக இருக்கிறது என்பதை அறியும்வரை மிகவும் வருத்தத்தோடு இருப்பான். இது என் சாபம்! இந்த விஷயம் யாரிடமாவது கூறினால், நீ அந்த இடத்திலேயே தலை வெடித்துச் செத்து விழுந்து விடுவாய்!” என்று சபித்தான்.

இதைக் கேட்டு பத்திரகிரி ராஜன் மிகவும் திடுக்கிட்ட போதிலும், மந்திரவாதி மறைந்தவுடன் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"எனக்குப் பிறக்கப் போகும் குமாரன் நீண்ட மூக்குடையவனாக இருந்த போதிலும், அவன் குருடனாகவோ அல்லது முடவனாகவோ இருந்தால் ஒழிய அவன் தன் மூக்கின் நீளத்தை அறியாமல் இருக்க முடியாது!”

இவ்வாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்ட அரசன், மறுபடியும் திருமணத்திற்கு இளவரசியின் சம்மதத்தைக் கேட்கச் சென்றான். இப்போது மலர்விழி உடனே சம்மதித்து விட்டாள்! ஆனால், அவர்கள் இருவரும் நீண்ட நாள் குடும்பம் நடத்தவில்லை. அதற்குக் காரணம், திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பத்திரகிரி ராஜன் காலமாகி விட்டான். அவன் சாகும் முன் யாருக்கும் தன் இரகசியத்தைக் கூறவும் இல்லை.