பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

குடிபோதையையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வேகமாக நட. நாம் போவதற்கு முன் விஷயம் தெரிந்து எவனாவது ஆற்றுக்குப் போய் அந்தப் பொருள்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போய்விடப் போகிறான்!” என்று சொல்லி வெகு வேகமாக நடந்து சென்றான்.

அவர்கள் ஆற்றுக்குள் சாக்கு மூட்டையைப் போட்ட இடத்தில் அரக்கன் வந்து நின்றான். "கீழே போய்ப்பார்த்து, என்னென்ன இருக்கின்றன சொல்” என்றபடி அவன் வேலைக் காரனைத் தூக்கி ஆற்றுக்குள்ளே வீசியெறிந்தான். அந்த வேலைக்காரன் தண்ணீரில் மூழ்கி ஒரு முறை மேலே எழும்பினான். மூச்சுத் திணறிக் கொண்டு மேலே வந்த அவன் நீந்தத் தெரியாமல் திண்டாடினான். அரக்கனை உதவிக்கு வரும்படி கையைக் காட்டினான். "ஆ! நீ அருமையான வேலைக்காரன்தான் ! தங்கத்தைப் பார்த்து விட்டாயா? இரு, இரு. இதோ நானும் வருகிறேன்" என்று சொல்லி அரக்கன் பிரசண்டனும் ஆற்றுக்குள்ளே குதித்தான். அவனுக்கும் நீந்தத் தெரியாது. ஆகவே அவர்கள் இருவரும் அந்த ஆற்றை விட்டுக் கரையேறி மலைமேலிருந்த மாளிகைக்குத் திரும்பவேயில்லை!

சமயோசிதம் சந்தையில் வியாபாரம் செய்து கிடைத்த பண மூட்டைகளையும், விலை போகாத மீதிச் சரக்குகளையும் கழுதை மேல் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். விற்காத சரக்குகளை யெல்லாம் தன் மனைவி மக்களை அணிந்து கொள்ளச் சொல்லிக் கொடுத்தான். சில நாட்களுக்குப் பிறகு அரக்கன் பிரசண்டன் திரும்பி வரவில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு அவனுடைய மாளிகையிலேயே போய் ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.