பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இருந்ததுதான்! ஆனால், பானுமதி தன் கோபத்தையெல்லாம் மூடி மறைத்துக் கொண்டு, புதிய ராணியான கோமளாவை அன்போடு வரவேற்றாள். தன் மூத்தாள் மகனாகிய தேவப்பிரியன் ஓர் அழகான பெண்ணைத் தேர்ந்தெடுத்திருப்பதாகப் பாராட்டினாள். அவள் எவ்வளவுக் கெவ்வளவு வெளியில் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாளோ அவ்வளவுக் கவ்வளவு அவள் மனத்துள்ளே பொறாமையும் குரோதமும் வேதனையும் உறுத்திக் கொண்டிருந்தது. அவள் மனத்திற்குள்ளேயே சதித் திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். -

திருமணமாகி ஒரு வருடமான பிறகு மன்னன் தேவப்பிரியன் பகை நாட்டின் மீது படையெடுத்துப் போக நேர்ந்தது. அவன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னால் தன் பட்டத்து ராணியிடம் விடை பெற்றுக் கொள்ள வந்தபோது, “அரசே! தாங்கள் திரும்பி வரும்போது, நான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பேன். தோட்டத்துப் பூக்களைப் போன்ற அழகான ஓர் இளவரசனுக்கும் ஓர் இளவரசிக்கும் நான் தாயாக இருப்பேன்' என்று கோமளா பெருமையோடும் மகிழ்ச்சியோடும் கூறினாள்.

தேவப் பிரியன் அவளுடைய கன்னத்தில் அன்போடு முத்தமிட்டு, 'நமக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் எனக்கு ஒரு தூததன் மூலம் செய்தியனுப்பு” என்று சொன்னான்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, ராணி கோமளாவுக்கு பூக்களைப் போன்ற அழகான ஓர் இளவரசனும், ஒர் இளவரசியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள். “அம்மா! என் கணவருக்கு இந்தச் செய்தியை ஒரு தூதன் மூலம் அனுப்பி வையுங்கள்!" என்று ராஜாவின் சிற்றன்னையான பானுமதியிடம் கோமளா கூறினாள்.

"அப்படியே செய்கிறேன்!” என்று பானுமதி உறுதி கூறினாள்.