பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

என்ன பதில் அனுப்பியிருக்கிறார் தெரியுமா, ஐயோ! அதை எப்படிச் சொல்வேன். பூப்போல் அழகான இளவரசனையும் இளவரசியையும் நான் திரும்பி வருவதற்கு முன்னால் கடலில் மூழ்கடித்துக் கொன்று விடுங்கள் என்று சொல்லியனுப்பியிருக்கிறார். பாவிப்பெண்ணே! நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்று பானுமதி பாசாங்காகக் கூவிக் கூவி அழுதாள்.

கோமளா தன் இரண்டு குழந்தைகளையும் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். கடைசியில் அவள் ஒருவாறு தெளிந்து "அவர் ராஜா அவருடைய கட்டளையை மீறக் கூடாது!” என்று சொன்னாள். பிறகு அவள் எழுந்திருந்து பூக்களைப் போல் அழகாக இருந்த இளவரசனை யும் இளவரசியையும் பொன்னாலாகிய பட்டுத் துணியொன்றில் சுற்றி ஒரு கூடையில் வைத்தாள். கடைசியாக ஒருதடவை இரண்டு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு விட்டுக் கண்ணில் நீர் வழிய வழிய ஒரு வேலைக்காரனைக் கூப்பிட்டு, அந்தக் கூடையைக் கொண்டு போய்க் கடலில் எறிந்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டாள். வேலைக்காரன் அந்தக் கூடையைக் கொண்டு போய்க் கடலில் எறிந்து விட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்து விட்டான்.

ஒரு மாதம் கழித்த பிறகு போர் முடிந்து ராஜா தேவப்பிரியன் தன் நாட்டிற்குத் திரும்பி வந்தான். கோட்டை வாசலில் அவனுடைய சிற்றன்னை பானுமதி நின்று அவனை வரவேற்றாள்.

"அம்மா என் மனைவி எங்கே? அவளுக்குப் பிறந்த சிங்கக் குட்டியும் முதலையும் எப்படி இருக்கின்றன?" என்று கேட்டான் தேவப்பிரியன்.

"ஐயோ! மகனே! இது என்ன புதுமை! உனக்கு யார் இப்படிச் சொன்னார்கள்? அவளுக்குச் சிங்கக் குட்டியும் பிறக்கவில்லை; முதலையும் பிறக்கவில்லை. பூக்களைப் போன்ற அழகான ஓர் இளவரசனும், ஒர்