பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

பத்திரகிரி ராஜன் மாண்டுபோன சில நாட்களுக்குப் பிறகு ராணி மலர்விழி ஒர் இளவரசனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு நெடுமாறன் என்று பெயர் வைத்தார்கள். உலகத்திலேயே மிகவும் அழகான நீல விழிகளையும், பவள நிற வாயையும் உடையவனாக நெடுமாறன் விளங்கினான். ஆனால், அவனுடைய மூக்கு மட்டும் மிகப் பெரியதாகவும் நீண்டதாகவும் இருந்தது. பாதி முகத்தை அந்த மூக்கே அடைத்துக் கொண்டு விட்டது. கண்ட ராணி மலர்விழி பெருங் கவலைக்குள்ளானாள். ஆனால், அவளுடைய தோழி மார்கள் அவளுடைய கவலையைப் போக்குவதற்காக, அந்த மூக்கு அவ்வளவு பெரிதல்ல என்றும் கீர்த்தி பெற்ற வரலாற்றுக் காலத்து ராஜாக்களுக்கெல்லாம் இதைப் போல நீண்ட மூக்குகளே இருந்திருக்கின்றன என்றும் சொல்லிச் சமாதானப் படுத்தினார்கள். இதையெல்லாம் கேட்டு ராணி மலர்விழி ஓரளவு தன் கவலையை மறந்து தன் குழந்தை நெடுமாறனை பேணி வளர்த்து வந்தாள். அவளுக்கு இளவரசன் மேல் அளவற்ற அன்பு இருந்தது. நாளடைவில் அவனுடைய மூக்கு அவளுக்குச் சாதாரணமாகத் தோன்றியது.

இளவரசன் நெடுமாறன் மிகவும் கவனமாக வளர்க்கப்பட்டான். அவனுடைய நீளமான மூக்கைப் பற்றிப் பேசாமல் இருக்க எல்லோருமே கவனம் எடுத்துக் கொண்டார்கள். சின்ன மூக்குடையவர்கள் அடைந்த துன்பத்தைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கதைகள் கூறப்பட்டது. அரண்மனைப் பெண்கள் தங்கள் ராணியின் மனதைச் சமாதானப் படுத்துவதற்காக மூக்கு நீளமாய் வளரட்டும் என்று தங்கள் பச்சைக் குழந்தைகளின் மூக்குகளை அடிக்கடி இழுத்து இழுத்து விடுவார்கள்.

நீள மூக்கு நெடுமாறன் கல்வி கற்க ஆரம்பித்தான். அவனுடைய ஆசிரியர்கள் சரித்திரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற அரசர்களைப்