பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

செய்ய முயன்ற என் மனைவியைத் தெரிந்து கொண்டு விடும்.” என்று ராஜா தேவப்பிரியன் சொல்லி விட்டுத் தன் மனைவி கோமளாவைச் சிறைச் சாலையிலிருந்து அழைத்து வரச் செய்தான். கந்தலாடைகளுடன் முகம் வெளுத்துப் போய் ராணி கோமளா குடியானப் பெண்ணிலும் கேவலமாக நின்றாள்.

"மாம்பழம் ஆடட்டும்! பறவை உண்மையைச் சொல்லட்டும்!” என்றான் ராஜா தேவப்பிரியன்.

இரத்தம் போல் செக்கச் சிவந்த மாம்பழத்தைச் சின்ன இளவரசன், தன் எதிரில் இருந்த மேஜையின் மீது வைத்தான். அந்த மாம்பழம் மேஜையின் மேல் குறுக்கும் நெடுக்குமாகக் குதித்துக் குதித்து நடனமாடியது. அப்படியே ராஜாவின் சிற்றன்னையான பானுமதியின் தலைக்குத் தாவி அத்தலையின் மீது சிறிது நேரம் குதித்துக் குதித்து நடனமாடியது. பிறகு அது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது.

இதைக் கண்டு சிற்றன்னை பானுமதி பயந்து அலறினாள். "இது உண்மையல்ல. உன் குழந்தைகளைக் கொலை செய்தவள் அதோ நிற்கிறாள்!" என்று சொல்லிக் கந்தலாடையுடன் நின்று கொண்டிருந்த கோமளாவைச் சுட்டிக் காட்டினாள்.

ஆனால் உண்மையுணர்ந்துரைக்கும் பறவை தெள்ளத் தெளிய உண்மையை விளக்கிச் சொல்லியது. "மகாராஜா! இதோ உட்கார்ந்திருக்கும் உங்கள் சிற்றன்னை தான் உங்கள் அருமை மனைவியின் மீது பொறாமை கொண்டு வெறுத்தாள். அவள்தான் இக்குழந்தைகளைக் கடலில் துக்கி எறியும்படி செய்தாள்” என்று சொல்லி, சிற்றன்னை பானுமதி செய்த சூழ்ச்சிகளையெல்லாம் முதலிலிருந்து கடைசிவரை விவரமாகத் தெரிவித்தது. அதன் பின் அது மறைந்து போய் விட்டது. உடனே சிற்றன்னை பானுமதி பயத்தினால் உடலெல்லாம் நடுநடுங்கி