பக்கம்:நூறாசிரியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

ப. அருளி
ஆய்வறிஞர் /துறைத்தலைவர்
தூயதமிழ்ச் சொல்லாக்க அகரமுதலிகள் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்.

வ் ஆசிரியப்பாத் தொகையை யாத்தளித்த ஆசிரியர் பெருந்தகையாகிய நம் பாவலரேறு ஐயா அவர்கள் இன்று நம்மிடையே இல்லை! என்னும் நெஞ்சக் குமுறலோடு இவ் அணிந்துரை ஈண்டுப் புறம்பெயர்கின்றது. தொண்டு என்பதையே வாழ்க்கைப்பாடாய்க் கொண்டுபீடு நிரம்பிய அப் பெரும்பணியில் தம்மையும் தமரையும் பின்னிப் பிணைத்திழுத்தவாறு. நடையிட்ட நம் தூய்தமிழ்ச் செம்மல் - நம்மைத் தவிர்த்து முதற்புறம் பெயர்ந்து தொண்டு மாதங்கள் (ஒன்பது திங்கள்கள்) தொலைந்தன!.....

இந்நூல் உள்ளடக்கிய பாட்டுகள் யாவும் தென்மொழியிதழ் தொடங்கப்பெற்று ( 1.8.59. திபி. 1990. நளி: 16) இடையறவுற்ற காலத்திற்குப் பிற்பாடு (15.450. திபி. 1991-மேழம்:3) யாக்கப் பெற்றனவாகும். இக்காலங்களில் அவரெழுதித் தொகுத்து - வைத்துள்ள கையால் தைத்துக் களிநிறவுரை போர்த்திய கையேடு காட்டும் உண்மையிது! முத்து முத்தாக- எழிற்பெற எழுதிச் சேர்த்து வைத்த அச் சொத்துத் திரட்சியினின்று தான்-இப்பாக்களை ஒவ்வொன்றாகத் தெரிந்தெடுத்தும் பொழிப்பும் உரைவிளக்கமும் திணை, துறை குறிப்பீடுகளும் வரைந்து தென்மொழிசுவடி: 5 ஓலை:7- இலிருந்து வெளிப்படுத்தி வந்தார். சுவடி: 26-ஓலை: 5வரை இவ்வகையிலான அறுபத்தாறு அருந்திறப்பாக்களுக்கு இந்நடைமுறை அடர்ந்து தொடர்ந்தது! (தி.பி2023. கும்பம் 1992 மார்ச்சு வரை) இவற்றின் எழுத்து வழி வெளிப்பாட்டு எழுச்சிக் காலங்களாக 1961-1962 என்னும் ஈராண்டுகளையும் குறிக்கலாம்.

இவற்றிற்கும் முன்னாண்டாகிய 1960-இல் (திபி1991-தைத் திங்களில்) வெளிப்படுத்திய பொங்கல் சிறப்பு மலரில்தான் இந்நூல் உள்ளடக்கியுள்ள பழஞ்சிறப்பு வகை நடைகொண்ட பா ஒன்று- முதன் முதலாகப் பதிவுற்றது. உலகப் பொதுவுறவு நேயங் கமழும் கருத்தடங்கிய 'கடு அணிமைத்தே' என்னுந் தலைப்பிடப் பெற்ற முதல் ஆசிரியமே- இந் நூறாசிரியத்திற்கும் முந்தி வந்தது! பொழிப்பும் இழைந்தியைந்து காட்சி தந்தது. (திருவாளர். பேரா. இலெனின் தங்கப்பா அவர்களின் ஆங்கிலப் பெயர்ப்பையும் அணைத்திருந்தது. அவை- இதில் இல!)

இம் முதலாசிரியமே இந் நூற்றாக்கத்திற்கு (நூல்+தாக்கத்திற்கு அஃதாவது நூலொன்றே இவ்வகையில் எழுத வேண்டும் என்னும் தாக்குரவிற்கு-) வழிகோலியிருக்கக் கூடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/10&oldid=1236378" இலிருந்து மீள்விக்கப்பட்டது