பக்கம்:நூறாசிரியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

89


18 தொம்பர் கைக்கழி


நகையும் வாரா தழுகையும் விளையாது
பகையும் கொள்ளா துறவும் பாராது
திகைப்பல் யானே முகில்திரி விசும்பிற்
கயிறாடு தொம்பர் கைக்கழி யன்ன
உயிராடு காதற் கூன்று கோலனைத்
துறக்கக் கூறினள் அன்னை;
இறக்கக் கூறின மென்றறி யாமே!

பொழிப்பு:

நகைப்பும் தோன்றாது; அழுகையும் விளையாது; நெஞ்சம் பகையும் கொள்ளாது; உறவையும் எண்ணாது, திகைப்புறுவேன் யான்! முகில் திரிகின்ற விசும்பின்கண் கயிற்றின்மேல் நின்று ஆடும் தொம்பரின் கையகத்துள்ள கழியைப்போல் உடல்மேல் நின்று ஆடிக் கொண்டிருக்கும் இவ்வுயிருக்குப் பற்றுக் கோடாய் விளங்கும் கோல் போன்றவனைக் கை நெகிழ்த்துவிடு எனக் கூறினாள் என் அன்னை; அது வழி என்னை இறந்துவிடு எனக் கூறினோம் என அறியாளாக,

விரிப்பு:

இப் பாடல் அகத் துறையைச் சார்ந்தது.

‘ஊசலாடும் என் உயிர்க்குப் பற்றுக் கோடாய் நிற்கும் என் காதற் குரியவனைத் துறந்துவிடக் கூறிய அன்னை, அது வழி என்னை இறந்து விடக் கூறுவதறியாமல் கூறினாளாக அவள் அறியாமை கருதி நகைக்கவும் தோன்றாது; உண்மையாகவே என்னை இறக்கக் கூறாமையால் அழுகையும் விளையாது; அவள் அன்பு கருதி என் நெஞ்சம் பகைமையும் கொள்ளாது; அவளென் அன்னை என்ற உறவையும் எண்ணிப்பாராது, எனவே திகைப்புறுவேன் யான்!” எனத் தலைவி தன் தோழியிடத்துக் கூறி யழுங்கிய தாகும் இப்பாட்டு.

நகையும் வாராது : பற்றுக் கோடாய தொன்றைப் பற்றற்க என அறியாமையால் கூறியது நகை விளைப்ப தென்னினும், தன் மேல் வைத்த அன்பின் முதிர்வால் அன்னை அவ்வாறு கூறினாளாகலின் அது நகையை விளைவிக்கவில்லை என்றவாறு. இனி, தன் கேள்வனைத் துறக்கக் கூறிய கூற்று, தான் இறக்கக் கூறியதே என்று அறியாமற் போனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/115&oldid=1221559" இலிருந்து மீள்விக்கப்பட்டது