பக்கம்:நூறாசிரியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

நூறாசிரியம்


19 பெருநகை விளைக்குமால்!


மழையினும் இருளினும் மருளா யாமே
ஊரலர் உரைத்ததும் ஒழிகென் றொழித்துப்
புணர்ச்சி வேண்டிக் குறியிடஞ் சென்றாங்(கு)
அச்சந் தவிர்த்த பிழையு மொன்றே!
இளமை மடவோர்க் கேமம் வேண்டி 5
அறவோர் கொளுத்திய அறவுரை கொளாது
கொண்ட கொள்கையுங் களவின் மாறி
நயப்பு வேண்டி அவனுழைச் சென்றாங்கு
மடமை வீழ்த்திய பிழையும் இரண்டே!
காட்சி கவ்வியும் கைதொடத் தந்தும் 10
மீட்சி யின்றி யணைய வடங்கியும்
வரையா வொருவற்கு வயவுமே லிட்டு
நாண முகுத்த பிழையும் மூன்றே!
இளமுகை வெண்பல் துவர்வாய் கனியிதழ்
கிளர்முலை துணங்கிடை தடங்குறங் கென்றவன் 15
காமுற்று மொழிந்த காலையும் ஏமுற்றுப்
பயிர்ப்பற வொடுங்கிய பிழையும் நான்கே!
என்றிவை வழி
நம்மருஞ் செல்வம் அவனத்தத் தந்தே!
இம்மருங்கு பின்யா மழுங்கல் 20
வெம்முது பெருநகை விளைக்குமா லெமக்கே!


பொழிப்பு:

மழை பொழி தரும் பொழுது இருள் மண்டிய இராக் காலத்தும் நாம் மருட்சியின்றி, ஊரார் அவனொடு கொண்ட தொடர்பு பற்றித் துற்றிக் கூறிய இழிவுரைகளை ஒழிகென்று புறந்தள்ளி, அவன்பாற் பழகுதலை விரும்பி, குறிக்கப்பெற்ற இடத்தே சென்ற வகையில் நமக்கியல்பாகிய அச்சத்தை நீக்கிய பிழை ஒன்றாகும். இளமைப் பருவத்தாற் பேதைமை நிரம்பிய கன்னியர்க்குத் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, உலகியலற முணர்ந்த பெரியோர் கற்பித்துக்கூறிய ஒழுக்க வுரைகளைச் செவியிற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/118&oldid=1221569" இலிருந்து மீள்விக்கப்பட்டது