பக்கம்:நூறாசிரியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

நூறாசிரியம்

துடிப்பால் மடப்பத்தையும், அவன்பால் பழகுமுன் நாணத்தையும் அவனொடு பழகுகையில் பயிர்ப்பாகிய கூசுதலையும் தவிர்த்த இந் நான்கு பிழைகளையும் முறையே செய்திராமல் இருப்பின், இக்கால் பொலிவிழந்து நீ வருந்தல் வேண்டியிராது என்றனள் என்க. இவை நான்கும் பெண் ஒருத்திக்கு இருக்க வேண்டிய அருமையுடைத் தான செல்வம் ஆகலின் அவற்றைத் துறந்தார் பெறுவது துன்பமே என்றாள் என்க.

நத்துதல் : விரும்பி நுகர்தல்.

நின் பெண்மை நலத்தை நீயே விரும்பி அவன் நுகருமாறு தந்தனை. இந் நிலை இரங்குதற் குரியதன்று நகைத்தற் குரியதாம். வெறும் நகையன்று பெரும் நகையாகும் என்றது காண்க. இனி, இத்தகைய பிழைபாடுகள் பெண்டிர்க்கு வழிவழி வந்தும் இன்னும் அவர்பால் அவ் வொழுக்கக் கடப்பாடுகள் இல்லாம லிருத்தல் முதுபெரும் நகை விளைவித்தது என்றாள். இனி, இந் நகை மகிழ்ச்சியான் வருவதன்றி, சினத்தானும் அவருவருப்பானும் வருதலால் வெம்முது பெருநகை என்று மொழிந்தனள் என்க.

வெம்முது பெருநகை: வெப்பஞ் சான்று முதுமையுற்ற பெருத்த நகை.

பெண்டிர் யாவரும் தமக்கியல்பாகிய அச்சத்தையும், மடப்பத்தையும், நாணத்தையும், பயிர்ப்பையும் தமக்குற்ற அருஞ் செல்வமாகக் கருதல் வேண்டும் என்றும், இளமைப் பருவமுற்ற பெண்டிரோ அவற்றைத் தம் பெருமைக்குரிய பண்புகளாகவும் உயிராகவும் கைக் கொள்ளுதல் வேண்டும் என்றும், அவ்வாறு கடைப்பிடியா விடத்து வருகின்ற இழிவும் இழுக்கும் தம்மைப் பெரிதும் துயர்ப்படுத்தும் என்றும், அத் துயர் பிறரை இரங்கச் செய்யாது எள்ளி நகைக்க இடந் தரும் என்றும், இவையே இளமை மடவோர்க்கு ஏமம் வேண்டி, அறவோர் கொளுத்திய அறவுரை என்றும் இப்பாட்டான் விளக்கப் பெற்றது.

இது குறிஞ்சி யென் திணையும், வரையா வொழுக்கத்து ஊரவர் கண்டழுங்குங் தலைமகட்குத் தலைவன் செவிப்படுப்பத்தோழி அறிவுறீயது என் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/122&oldid=1221583" இலிருந்து மீள்விக்கப்பட்டது