பக்கம்:நூறாசிரியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

99


21 வீணர் ஒதை




மறவி வாழியோ! உறவின் நெருங்கிக்
கரவின் மொழிவாங்கிக் கதுமென் புறமாறும்
பொய்தோய் நெஞ்சத்துப் புரையோர் கேடும்,
தவலறு பேதைமைத் தகவோர் தவறும்,
கவலறு கட்டுரை கடிதின் தந்து 5
நிலையின் நீங்கி நிறைகெட நெகிழ்க்கும்
விலைமாறு வினைகொள் வீணர் ஒதையும்,
முந்நீர் உலகத்து மூண்டுயிர் மேவ்லால்
உட்பகை நொதியும் உளத்தோர் தீமையும்
எட்பக வேனுமெம் முளம்பதி யாமல் 10
கதிர்க்கைப் பணியாக் கடுகிச்
சிதர்க்கை உகலும் செய்கை யானே!


பொழிப்பு:

மறவியே நீவாழ்வாயாக! உறவினர்போல் நெருங்கியிருந்து கள்ளத்தினராய்யாம் கூறும் உள்ளுறை உண்மைகளை மொழியக் கேட்டுச் செவிகளால் வாங்கி, அவற்றைப் புறத்தேபோய் விரைந்து பிறர்பால் உரைபோக்கும், பொய்ம்மையே தோய்ந்து நிற்கும் நெஞ்சினையுடைய கீழ்மையினோர் செயத்தகும் கேடுகளும், குற்றமற்ற பேதைமையால் தக்கவர் செய்யும் தவறுகளும், கவலையைப் போக்கும் நீண்ட உரைகளால் விரைந்து உறுதி கூறி, அவ்விடத்தே நின்று நீங்கிய அளவினானே தமக்குற்ற பெருமை கெடுமாறு அவ்வுறுதியை நெகிழ்வித்துத் தாம்கொண்ட கடமைகளைப் பிறரிடத்துத் தாம்பெறும் நலன்களுக்கு விலையாக மாற்றிக் கொள்ளும் புல்லிய வினைப்பாடுகளைக் கொண்ட வீணர்தம் ஆரவாரங்களும், முப்புடையும் நீர் சூழ்ந்த இவ்வுலகின் வந்து பொருந்தி உயிர்ப்புற்று மாந்தத் தோற்றத்தோடு, மேவுகின்றாராய் உள்ளே கொண்ட பகை நாளுக்கு நாள் ஊறிப் புளிப்பேறும் தன்மை கொண்ட நெஞ்சினோர் செய்கின்ற தீமைகள் தாமும் ஒர் எள்ளின் பிளவுத்துணையேனும் எம் உள்ளத்தே தங்கியிராமல், கதிரவனின் சுடர்க்கைகளின் முன் மூட்டமிட்ட மூடுபனி விரைந்து சிதர்வுற்று அழியுமாறுபோல் செய்யும் செய்கையால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/125&oldid=1221591" இலிருந்து மீள்விக்கப்பட்டது