பக்கம்:நூறாசிரியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

நூறாசிரியம்


விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

மாந்தருக்குள்ள மறவியை வாழ்த்துவதாகும் இப்பாடல் , மறவி மறதி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன் -என்று திருவள்ளுவர் மறவியைக் கெடுகின்றார்தம் தன்மையுள் ஒன்றாகக் குறிப்பர். கல்வி நலனைப் பொறுத்த அளவில் மறவி கடிய வேண்டிய தன்மைகளுள் ஒன்றாகக் குறிக்கப் பெறினும் பிறர் செய்யும் தீங்குகளையும் நமக்கு இயல்பான் வந்து பொருந்துகின்ற துன்பங்களையும் பொறுத்த அளவில் மறவி மாந்தத் தன்மைக்குத் தேவையானதொரு தன்மையதாய்ப் பாராட்டப் பெறுகின்றது.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. - என்னும் குறளில்


மறவி பாராட்டப் பெறுதல் காண்க


ஈண்டுக் குறிக்கப்பெறும் இப்பாடலும் அத்தகைய மறதியைப் பாராட்டிப் புகழ்வதோடு, அது செய்ய வேண்டிய வினைப்பாடுகளையும் எடுத்துக் கூறுகின்றதாக அமைந்துள்ளது.

“ஏ, மறதியே! உறவினர்போல் நெருங்கிக் கரவுள்ளத்தினராய் நம்பால் பெற்ற மொழிகளைப் புறத்தே மாறியுரைக்கின்றாராய்ப் பொய்த்தொழுகும் புரையோர் செய்யும் கேடுகளையும், தவறு நினையாதவர் ஒரோவொருகால் செய்யும் பேதைமை சான்ற செயல்களால் வரும் தவறுகளையும், நாம் நம்பத்தகுந்த அளவு உறுதிமொழிகளை எளிதே கூறிப் புறத்தே போய் அவர்க்கு நன்மை வந்தவிடத்து நிலைமாறிக் கொள்ளும் நெகிழ்ந்த மனங்கொண்டவர்களின் அசைநிலைகளையும், மாந்தர் உருவினராகி நம்பால் உட்பகை கொண்டொழுகும் உளத்தவர் செய்கின்ற தீமைகளை யும், ஒர் எள்ளைப் பகிர்ந்த சிறிய அளவேனும் நம் உள்ளத்தில் நிலைத்து நில்லாமற் செய்து, அவற்றைப் பனிமூட்டத்தைச் சிதர்க்கும் பகலவனைப்போல் அழித்துவிடும் தன்மை பொருந்திய உன் செயலுக்காக, நீ வாழ்வாயாக"- என்று பாராட்டிக் கூறுவதாக அமைந்ததிப் பாடல்.

துன்பங்களுக் கேதுவாகிய குற்றங்களையும் அவற்றை விளைவிக்கும் மாந்தர்தம் வினைப்பாடுகளையும் மறந்து போகாமல் எண்ணத்திலேயே வைத்திருப்பதால், அத்துன்பச் சுமை மேலும் மேலும் பெருகுவதல்லால் குறைவதில்லை. ஆகலின் அத்துன்ப ஏதுக்களை மறந்து போவதே நாம் நம்மை இன்பத்தின்பாலும் அமைதியின்பாலும் வழி நடத்திச் செல்லும் வகையாகும் என்பதை உணர்த்துவதே இப்பாடலின் நோக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/126&oldid=1220727" இலிருந்து மீள்விக்கப்பட்டது