104
நூறாசிரியம்
மலர்மிசை நாற்றம் போல் மதிமிசை யொளிபோல
நலங்கிளர் கள்ளுள் இளவெறி நசைபோல்
தழலினுள் தெறல்போல் தணிப்பரிதாம் விறல்வேட்கை
எழுந்தது மறிகிலன்; படர்ந்தது முணர்கிலன்
மடுத்தலை கொணர்நீர் வேண்டி 5
எடுத்ததோட் கள்வன் எதிர்ந்த ஞான்றே!
பொழிப்பு:
மலரின்கண் அது மலர்ந்தவிடத்து வந்து தங்கும் மணத்தைப் போலும், எழுகின்ற நிலவின்பால் நிறைந்து விளங்கும் ஒளியைப் போலும், உடல் நலத்தைக் கிளர்விக்கும் கள்ளினுள் வேட்கையை மூட்டுவிக்கும் மெல்லிய வெறியைப் போலும், எரிகின்ற தணலுள் தோன்றி விளங்கும் சூட்டைப்போலும், அடக்குதற்கரிதாகிய இவ் வெற்றி கொள்ளும் காதல் விருப்பம் என்பால் திடுமென்று எழுந்து நின்றதையும் அறிந்திலேன்; என் உடலும் உள்ளமும் பற்றிப் பரவி நின்றதையும் உணர்ந்திலேன்; நீர்தேங்கிய மடுவினிடத்தே யான் கொணர்ந்த நீரை விடாய்க்கென வேண்டிக் கேட்க, எடுத்த தோள்களையுடையனாய் என் நெஞ்சுகொண்ட கள்வன், என்முன் வந்து நின்ற அப்பொழுதே!
விரிப்பு:
இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.
தனக்குரிய தலைவனைக் கண்டமட்டிலேயே தன் உள்ளம் மலர்ந்து நின்றதையும், உடல் ஒளிபெற்றுப் பொன்போற் பசந்ததையும், மெல்லிதாய காதலுணர்வு மேனி முழுதும் பரவி நின்றதையும், மெய் சூடேறியதையும் தலைவி தன் தோழிக்குக் கூறி இஃது இயற்கை வழி பொருந்திய காதல் ஆகலின் இதன் பிரிவை யான் ஆற்றுதற்கல்லேன் என்று தன் ஆற்றாமையைப் புலப்படுத்துவதாகும் இப் பாட்டு.
மலர்மிசை நாற்றம்போல் - முகையவிழ்ந்து மலர்ந்த மலரிடத்து வந்து பொருந்துகின்ற மணம்போல், முகையாயிருந்தபொழுது தோன்றாதிருந்து முழுமலர்ச்சி யெய்திய பொழுது கமழ்தலுறும் மலரின் மணம்போல், தலைவனைக் காணாவிடத்து அடங்கியிருந்து அவனைக் கண்டவிடத்து உள்ளத்தே மணம் பரப்பியதாம் அக்காதல் எனக் கூறினாள்.