உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூறாசிரியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

நூறாசிரியம்


23 கோலச் செழுந்தமிழ்


அங்கா வெனுமங் காந்தமுக மேந்தி,
உங்கா வெணவமிழ் துறிஞ்ச வூட்டிப்,
பால்வாய் மோந்து பனிமுகம் நீந்தி,
மாலுறக் குழைவுடல் அணைந்தகங் குளிர்ந்து,
புன்றலை அளைந்து பொன்னுடற் கழுவி, 5
தென்றல் சிதர்புகு மிளமயி ரார்த்தி,
கதைபல குழைந்து காகஞ் சுட்டி,
இதழுடை மாட்டி, மணிக்கண் ணெழுதி
உள்ளார்ந் தெழுஉம் உவகை பொலியக்
கள்ளா ரிதழ்கள் கனிய முத்தி, 10
கொட்டிய பூங்கை வட்டித் தெடுத்து
மொட்டுடல் தாங்கித் தொட்டிற் கிடத்தி,
நீலக் கொழுங்கண் நனையிதழ் பொருந்தக்
கோலச் செழுந்தமிழ்த் தாலம் பயிற்றி
ஆர்தல் அயர அசைதல் சோர்வுற 15
ஈர்வாய்க் குதலை யிழிதரக் கிறங்கும்
இளமென் பூவுடல் இடையிடைப் பேணி
அருள்விழி மூடும் அன்னைக்கு
இருள்கழி உலகம் ஈடிறந் தன்றே!


பொழிப்பு:

அங்காவென அரற்றி, அங்காந்த வாயினதாகிய குழவியின் முகத்தை இருகையால் ஏந்தி எடுத்தும், உங்காவெனக் கூறி அமிழ்தத்தை உறிஞ்சிக் குடிக்குமாறு ஊட்டி, அப்பாலுண்ட வாயினைத் தாய்மையால் முகர்ந்தும், குளிர்ச்சி பொருந்திய அம் முகத்தோடு முகம் வைத்து நீந்துதல்போல் அளாவி, மயங்குதலுறுமாறு, சந்தனக் குழைவுபோலும் உடலை அணைந்து, நெஞ்சங்குளிர்தலுற்றும், இளந்தலையைக் கோதிப் பொன் போன்ற உடலை நறுநீரால் கழுவியும், தென்றல் சிதர்ந்து புகும் இளமயிரைக் காற்றிலும் இளவெயிலிலும் உலரச் செய்தும், கதைபல குழைந்து கூறிக் காகத்தை விளித்து வேடிக்கை காட்டி, மலரிதழ் போலும் மெல்லிய உடையை உடல் நலுங்காது மாட்டியும், மணிபோலும் ஒளிபொருந்திய கண்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/134&oldid=1220752" இலிருந்து மீள்விக்கப்பட்டது