பக்கம்:நூறாசிரியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

111


கொட்டிய பூங்கை கொட்டி விளையாடிய குழந்தையினது கை

வட்டித் தெடுத்து நலுங்காமல் எடுத்து வட்டித்தல்-வடித்தல்-வடிவம் செய்தல், வடிவம் செய்த ஒன்றை அது குலையாது எடுத்தல் களிமண்ணால் ஆக்கிய கலம் ஒன்றினை வடிவம் குலையாமல் கைப்பழக்கமாக எடுத்து வைப்பது போல், பசுங்குழவியையும் நலுக்கமுறாது கைநயமாக எடுத்தாள் ‘ என்க.

மொட்டுடல் தாங்கி தாமரை மொட்டுப் போலும் இளந்தலையும், தண்டுபோல் நிமிர்பற்ற உடலும் இரு கைகளாலும் தாங்கி.

தொட்டிற்கிடத்தி தொட்டிவில் இடலும், போடலும் இல்லாது கிடத்துதல் என்றது, குழந்தையை மெதுவாகக் கிடக்கும்படி செய்தாள் என்றற்காம், கிடத்துதல்-கிடையாக வைத்தல்,

நீலக் கொழுங்கண் நீலநிறம் பொருந்திய கொழுமையான கண்கள்.

நனையிதழ் கண்ணிரால் நனைந்த, மலர் இதழ் போலும் இமை

பொருந்த பொருந்தும்படி மூடி உறங்கும்படி

கோலச் செழுந்தமிழ்த் தாலம் பயிற்றி உரை அழகும், சொற் செழுமையும் கொண்ட தமிழ் மொழியில் தாலாட்டுக்கூறி. தாலம்தாலப்பாட்டுதாலாட்டு, பயிற்றுதல்-பயில்வித்தல், தாலாட்டு வழித் தாய்மொழிப் பயிற்சியையும் உறக்கவின்பத்தையும் ஊட்டுதலால் பயிற்றுதல் எனலாயிற்று.

ஆர்தல் அயர பாடல் ஒலி அயரும்படி

அசைதல்சோர்வுற குழந்தையை ஆட்டுவிக்கும் அசைவு சோர்வுறும்படி அசைவு சோர்வுறுதல்-அசைகின்ற கை சோர்வுறுதல்.

ஈர்வாய் ஈரமுடைய வாய்.

குதலை இழிதர குழந்தையின் வாயினின்று குதலை என்னும் ஒருவகை நீர் இழிய இதற்குச் சொள் என்றும் ஒரு சொல் உண்டு.

கிறங்கும் உறக்க மயக்கத்திலாழும்.

மென்பூவுடல் இடையிடைப் பேணிஇள இளமையும் மென்மையும் வாய்ந்த பூப்போன்ற குழவியின் மெல்லுடலைத் தாய் தன் உறக்கத்திலும் இடையிடையே விழித்துப் பேணி.

குழவியின் மேற் போர்த்திய துணி உறக்கத்தின் இடையிடை விலகுவதைச் சரிசெய்வதும், உடலுறுப்புகள் அழுந்துமாறு உறங்கும் குழந்தையை அடிக்கடி புரட்டிச் சரிவரப் படுக்கவைப்பதும், வாயைத் திறந்துகொண்டோ, விரலைச்சப்பிக் கொண்டோ உறங்குமானால் அதன் முகத்தை உயரப்படுத்தியோ, வாயிலுள்ள விரலை அப்புறப்படுத்தியோ விடுவதும், கழிகளால் ஈரப்படும் படுக்கைத் துணி களை அடிக்கடி மாற்றுவதும் பிறவும் குழந்தையைத் தாய் இரவில் பேணும் வகைகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/137&oldid=1220766" இலிருந்து மீள்விக்கப்பட்டது