பக்கம்:நூறாசிரியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

நூறாசிரியம்

அல்லர் உரையைக் கட்டளையாகக் கொண்டு செலுத்தப் பெறும் ஆட்சி வன்மையுடைய அவ்வரசரினும் ஓங்கிய ஆற்றல் உடையவர். அரசு முறை மாறுபடலால் குடிமக்களும் தம் நிலையினின்று கெடலுறு முன், அவ்வரசர்க்கு அறிவான் அமைந்து அறவுரை கூறி, அதனை மேற்கொண்டொழுகச் செய்ய வல்ல அமைச்சரும் அல்லர்; குற்றமற்ற அவ்வமைச்சரவையைச் சார்ந்தாரினும் குடிகளின் நலத்தை மிகுதியும் எண்ணி உரைக்கின்ற நாவினை உடையவர். நீரின் நுரைபோலும் மென்மையும், பஞ்சின் இழை போலும் வெண்மையும் கொண்ட நரையைத் தாங்கி, ஆண் அரிமாவின் பிடரியைப் போலும் முகத்துத் தாடியும் மீசையும் அடர்ந்து, மக்களை நெறிப்படுத்தும் வழிமுறைகளையே நினைத்து நிற்கும் நெஞ்சின் மீது படர்ந்து தொங்குமாறு, பாடிகள், சேரிகள், பட்டிகள், பாக்கங்கள், ஊர்கள், குடிகள், ஆரவாரம் மிகுந்த நகரங்கள் தோறும், வெயிலிலும், மழையிலும், நடுக்கஞ் செய்கின்ற பனியிலும், பிறர் தூற்றும் பொய்யுரைகளுக்கும், குற்றஞ் சார்ந்த இழிவுரைகளுக்கு மிடையிலும் தாம் கொண்ட கொள்கைப்பாட்டின் உறுதி தளராமல், காலையென்றும், மாலை யென்றும், வெப்பம் மிகுந்த நண்பகலென்றும், குளிர் மிகுந்த நள்ளிர வென்றும் பாராது, ஒவ்வொரு நாளும் தாமே நாடிப்போய்த் தம் கொள்கையை வலியுறுத்த உண்மையான செய்திகளையே துணைக்கொண்டு, சொற்புனைவும், கருத்துப்புனைவும் இல்லாது, கொல்லப் பாயும் வரிப்புலியின் வீறுசான்று சொற்களைக்கேட்போரின் செவிவழி மனவயலில் பாய்ச்சியும், தமிழ்க்குடியின் வன்மையைக் குலைத்து அழித்த ஆரிய இனத்தின் கேடுகளை அடியோடு வெட்டிச் சாய்த்தும், பட்டப் பெயர்களையும், பதவி நலன்களையும் பாராட்டுரைகளையும் மனத்தால் விரும்பாமலும், மக்கள் தம் அறியாமையால் கைக்கொண்டொழுகும் பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியும், அவர் தம்மை வளர்ச்சியின்றி வெறுமைப்படுத்தும் இழிநிலைகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் மயக்கமுற்ற போக்கையும், அறியாமை இருளையும், பிறவி நம்பிக்கைகளையும் நீக்குமாறு அறிவுறுத்தியும். கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே யாவருக்கும் நிறைவானதெனச் சுட்டிக் கூறியும், மக்கள் நலமெய்த முட்டுக்கட்டைகளாக நிற்கும் குலப் பாகுபாடுகளை வெட்டி வீழ்த்தியும், சமயங்களின் அடிநிலை வேர்களை அறுத்தும், தெளிவற்றுக் குழப்பமான கொள்கை சார்ந்த போலிக்கடவுள் தன்மைகளை மறுத்துரைத்தும், எல்லா மக்களும் , எல்லா நலன்களையும், எவ்விடத்தும் துய்த்தல் செய்யுங்கள் எனும் புதுமை உரைகளைப் பொழிவித்து, அதன் வழிப் பொதுமை யறத்தை மக்கள் மனத்தில் தழையச் செய்தும் வருகின்ற அரிய செயல்களுக்கு உரியவர் ஆகலின், அவரே பெரியார் என்னும் பெயர்க்கு உரியவர் ஆவர்.

விரிப்பு:

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/140&oldid=1220770" இலிருந்து மீள்விக்கப்பட்டது